பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மருமக்கள்வழி மான்மியம்

கரப்பு - அங்கதம்' என இருவகைப்படும் என்றனர் (செய். 129, 124). ஒருகால் இது 'பழிகரப்பு-அங்கதம் என்றதில் அடங்கலாம். ஆனால் இதைப் பிரகசனம் என்று சொல்வது மிகப் பொருத்தமாகும்.

பிரகசனத்தின் இயல்பை நாம் நன்குணர்தல் வேண்டும். மக்களில் ஒரு பகுதியார் தாம் கையாண்டு வரும் ஒழுக்கங்களும் பழக்க வழக்கங்களும் நல்லவையென்று கொண்டு, அவைபற்றித் தமக்குள் தாமே திருப்தியடைந்திருப்பர். அவ்வாறு திருப்தியாயிருத்தல் தவறென்றும் அவ்வொழுக்க முதலியன திருந்துதல் அவசியமென்றுங் காட்டி நல்வழிப்படுத்துதலே பிரகசனத்தின் நோக்கமாகும். உண்மையைச் சிறிது மிகைப்படுத்திக் கூறுதல் இவ்வகை நூல்கள் மேற்கொள்ளும் பொது முறையாகும்.

இப் பிரகசனம் இருவகை நெறியிலே செல்லலாம். ஒன்று பண்பட்ட அமைதிநெறி; நல்லியற்கையினின்றும் தவறாத நெறி. இந் நெறியிலே பிரகசனத்தின் அடிப்படையில் நீதி உள்ளடங்கிக் கிடக்கும். ஆசிரியன் தான் பரிகசிக்கும் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதை மறந்துவிடுவதில்லை. தான் சமுதாயத்தினரைப் புண்படுத்த வேண்டுமென நினைப்பதேயில்லை. பரிகாசமும் மிகவும் நயமாகவும் சரளமாகவும் இருக்கும். லத்தீன் ஆசிரியர்களுள் ஹாரெஸ் (Horace) என்பவர் இந்நெறியில் பிரகசனங்கள் எழுதியமையால் இதனை ஹோரேஷியன் (Horation) நெறியென்று மேலைநாட்டறி-