பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை
I


நாஞ்சில் நாடு இப்போது திருவிதாங்கூர் இராச்சியத்தின் தெற்குப் பகுதியாயுள்ளது. பெரும் புகழ் பெற்ற 'குமரி' இந்நாட்டினகத்தேதான் இருக்கிறது. இந்நாட்டினர் அனைவரும் தமிழார்வம் மிக்கவர்களாகவே உள்ளவர்கள். இன்றும் இந்நாட்டில் தமிழ்மொழியே வழங்கி வருகிறது. இன்றிருப்பது போலவே சுமார் 1800 ஆண்டுகட்கு முன்பும் தமிழ் கூறு நல்லுலகத்தின் பகுதியாகவே இந்நாடு விளங்கிற்று. தொல்காப்பியத்தின் பாயிரத்தில்,

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறு நல்உலகத்து

என வருவதைக் கொண்டு மேற் கூறியதன் உண்மை தெளியலாம். இப்பாயிரத்தில் வரும் அதங்கோட்டாசான் குமரிக்கருகிலுள்ள திருவிதாங்கோடு என்னும் ஊரினர் என்பதும் இங்கே மனங்கொளத்தக்கது. பாண்டியனுக்குரியதாகக் ‘குமரிச் சேர்ப்பன்’ என்று ஒரு பெயர் திவாகரத்தில் காணப்படுகிறது. இப் பெயரால், இந்நாடு தொன்றுதொட்டுப் பாண்டியனுக்குரியதாயிருந்தமை புலனாம். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் குறித்த அச்சமும் புகழும் தெற்கின்கண் உள்ள கன்னிக்குத் தெற்கும்