பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதியில் நாடு ஆங்கிலேயர் வசம் வீழ்ந்ததையும் ஆசிரியர் கோர்வையாக, நிரல்படத் தக்க ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

மன்னர்களைப் பற்றியே எழுதிவந்த நண்பர் கமால் அவர்கள் சாதாரண ஆனால் பொறுப்புள்ள குடிமகன் ஒருவரின் போராட்ட வாழ்க்கையை உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். சில இடங்களில் நாம் வரலாற்றைப் படிக்கிறோமோ அல்லது வரலாற்றுப் புதினத்தைப் படிக்கிறோமோ என்ற உணர்வு தோன்றத் தக்க வகையில் ஆசிரியர் நூலைப் படைத்துள்ளார்.

மயிலப்பனின் இலட்சியம் சிறப்பானதாக இருந்தாலும் அடிப்படைக் கட்டுமான வசதிகள் இல்லாநிலையில் அவரது போராட்டம் அவல முடிவுக்கு வந்து விடுகிறது. இம்முடிவுக்கு அவரின் மாமனாரே காரணம் என அறிகிறபோது நாம் துடித்துப் போகிறோம். "பணம்" என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இவ்வரலாறு ஒரு நல்ல எடுத்துக்காட்டு

கண்கள் பழுதுற்ற நிலையிலும், உடல்நிலை செம்மையாக இல்லாத நிலையிலும், நண்பர் கமால் அரிதின் முயன்று இந்நூலை எழுதியிருக்கிறார். அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயனடைவதோடு ஆசிரியரைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்பது என் அவா. விரைவில் நல்ல குணம் பெற்று ஆசிரியர் மேலும் பல நூல்களை எழுத வேண்டுமென வாழ்த்துகிறேன்

கோ. விசயவேணுகோபால்.

VIII