பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறவர் சீமை

கமுதி திருப்பத்துர் ஆகிய ஊர்களில் அந்த கோட்டைகளின் பகுதிகள் இன்னும் பரிதாபமான நிலையில் நின்று கொண்டு கடந்து சென்ற பழமையின் வேதனை விளிம்புகளை நினைவூட்டுவதாக உள்ளன. அழிமானங்கள் தொடர்ந்து வந்த நிலையிலேயே பட்டி தொட்டிகளில் எல்லாம் மக்களது குடியிருப்புகளைக் கும்பெனியாரது அணிகளும், கூலிப்படைகளும் சூழ்ந்துகொண்டு, வீடுதோறும் சோதனை செய்து ஆங்காங்கு அந்த மக்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்து குவித்தனர். கும்பெனியாரது ஆவணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆயுதங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை மேலெழுந்தவாரியாக பார்க்கும்பொழுது அன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் இராமநாதபுரம், சிவகெங்கை, திருநெல்வேலி மக்கள் கும்பெனியாரை மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் அழித்து ஒழிக்கும் வகையில், எஞ்சியுள்ள ஆயுதங்களையும் மிகுந்த சிரத்தையுடன் பாதுகாத்து வைத்திருந்தனர் என்பதை நாம் எளிதில் அறியமுடிகிறது.