பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59

மாவீரன் மயிலப்பன்: - - - =

வைப்பதற்கு முயற்சி செய்தால் என்ன என்ற உள் உணர்வு அவரது உள்ளத்தில் எழுந்தது. இந்தத் திட்டத்தை எவ்விதம் நிறைவேற்றுவது? ஒரு சிறிய அணியினராக தமது பழைய தோழர்கள் சிலரைத் திரட்டிச் சென்று இரவில் கோட்டை வாசலில் காவல் வீரர்களுக்கும், சிறை அலுவர்களுக்கு, கையூட்டு வழங்குவதா? அல்லது திடீரென பயங்கரமாக அவர்களைத் தாக்கி தமது மனைவியை மீட்டு வருவதா...? இந்த இரண்டில் எதனை மேற்கொள்வது அதனை எப்படித் திறமையாக செய்து முடிப்பது?

இந்தச் சிந்தனையிலேயே நாள் முழுவதையும் செலவழித்த மயிலப்பன் சேர்வைக்காரருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அன்று மாலை வேளையில் வடக்கே திருச்சுழியலை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

பங்குனி மாத பகல் வெயிலில் பயணத்திற்கு சிரமமான சூழல் என்றாலும் மயிலப்பன் சேர்வைக்காரர் திருச்சுழியல் சத்திரத்திலிருந்து வழிநடையாக நரிக்குடிபோய்ச் சேர்ந்தார். அங்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் சேதுபதி மன்னரால் அமைக்கப்பட்டிருந்த அன்ன சத்திரம் அண்மைக்காலம் வரை சிவகங்கைப் பிரதானிகள் மருது சேர்வைக்காரர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளை முழுமையாக அண்மையில் கும்பெனியார் கைப்பற்றி இருந்ததால் இந்த சத்திரத்தின் நிர்வாகம் சீர்குலைந்திருந்தது. அத்துடன் அங்கு தங்கிச் செல்லும் பயணிகளது எண்ணிக்கையும் குறைந்து இருந்தது என்றாலும் அங்கு வழங்கப்பட்ட கம்மங்கூழையும், பருப்புத் துவையலையும் ஏனைய வழிப், போக்கர்களைப் போல மயிலப்பன் சேர்வைக்காரரும் உண்டு அங்கு தங்கியிருந்தார். ஆனால் அவரின் உள்ளத்தில் எத்தனையோ விதமான சிந்தனைகள் விரிந்து பெரிதாகியும் மீண்டும் சுருங்கும் கொல்லம்பட்டறை துருத்தியைப் போல புதிய புதிய சிந்தனைகளும் திட்டங்களும் அவரது மனதில் தோன்றி மறைந்த வண்ணம் இருந்தன.