பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

=மறவர் சீமை

ஆயுத வலிமையைக் கொண்டு குடிகளை அடக்கி ஒடுக்கி அவர்களுக்கு வேண்டிய பொருளையும், பணத்தையும் வரி வசூல் என்ற பெயரில் கொள்ளையிட்டுக் குவித்தனர். இந்நிலையில் பரங்கியரது கொடுமைகளை களையும் கடைசி ஆயுதம் வன்முறையில் கிளர்ச்சி ஒன்றுதான்! முதுகளத்துர் நாடு, ஆப்பனுர் நாடு, வேம்பு நாடு, அளற்று நாடு, கிடாத்திருக்கை நாடு, கமுதை நாடு, கருநீலக்குடி நாடு, பருத்திக்குடி நாடு, வடதலைச் செம்பி நாடு, வெண்பா நாடு, பொலியூர் நாடு, ஆகிய பகுதிகளில் நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துத் தமது திட்டத்திற்கு ஒத்துழைப்புக் கோரினார், சித்திரங்குடி சேர்வைக்காரர். அதனது தொடர்ச்சிதான் முன்னர்கண்ட முதுகளத்துரில் தொடங்கப்பெற்ற மக்கள் கிளர்ச்சி.

இளவேனில் காலத்தின் வெம்மை மெதுவாகப் பரவிக் கொண்டிருந்தது. முந்தைய மார்கழி, தை மாதங்களில் வறட்சி காரணமாக பயிர்கள் தீய்ந்து போய் அறுவடை இல்லாத காரணத்தினால் பெரும்பாலான குடிமக்கள் பயிர்த் தொழிலில் ஈடுபட இயலாமல் முழங்காலைக் கட்டிக் கொண்டு தங்களது வீட்டு முன்திண்ணையில் முடங்கியவாறு பல பேச்சுக்களையும் பேசிப் பொழுது போக்கி வந்த நேரம். இந்தச் சமயத்தில் சித்திரங்குடி சேர்வைக்காரரது சாதனைகளைக் கேள்விபட்டுப் பிறந்த மண்மீது கொண்ட பற்றும், சேதுபதி மன்னர் மீது வைத்துள்ள ராஜ விசுவாசமும் உந்தித்தள்ள அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொங்கி எழுந்தனர். சிறு துளிகள் பெரு வெள்ளமாவது போல முதுகளத்துர் கிளர்ச்சி மிகப் பெரிய மக்களது சக்தியாக உருவெடுத்தது. காலம் காலமாகக் கட்டுப்பட்டுக் கிடக்கும் கடல் தனது எல்லையான கரையைக் கடந்து விட்டால்........ ! அவ்வளவுதான் எங்கும் பேரழிவு:

அதுதான் முதுகுளத்தூர் வட்டாரக் கிளர்ச்சியாக திகழ்ந்தது. சேது நாட்டின் புனித மண்ணை மாசுபடுத்தி, மக்களைக் கொடுமைப்படுத்திப் பணம் பறித்த பரங்கிகளை விரட்ட வேண்டும். திருவணை அமைத்த இராமநாதசாமிக்கு அடுத்த படியாக