பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் - —99

புரிந்து கொண்டார். உடனே அவரது கட்டுக்களை அவிழ்த்துவிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். என்ன இருந்தாலும் அபிராமம் முதுகளத்துர் மண்ணைச் சேர்ந்தது. அபிராமம் அம்பலக்காரரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர். நன்கு அறியப்படாத நிலையில் ஒரு குடிமகனது உயிரை ஆயுத பலத்தால் அழித்து நீக்குவது பொருந்தாதுதானே! -

இந்த நிகழ்ச்சி மயிலப்பன் சேர்வைக்காரருக்கும் சிவகெங்கைச் சேர்வைக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தின. தான் கட்டளையிட்டவாறு அபிராமம் கிராமத்திற்கு தீயிட மறுத்ததுடன் தனது எதிரியாகக் குறிப்பிட்ட நபரைக் கொல்லாமல் மயிலப்பன் சேர்வைக்காரர் அவரை விடுதலை செய்வது தவறு, தனது உத்திரவிற்கு புறக்கணிப்பு என்பது பொறுக்க முடியாதது. ஆதலால், அவரைக் கொன்று போட்டுவிட வேண்டும் என சின்ன மருது சேர்வைக்காரர் சினத்தால் துடித்தார்.

முதுகளத்துர் பகுதி உள்ளிட்ட மறவர் சீமை மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே உயிரைப் பணயம் வைத்து, உடலை உலுக்கும் அனுபவங்களை சகித்துக்கொண்டு இந்த அக்கினிப் பரீட்சையில் இறங்கியிருக்கும் எனக்கு இந்தப்பகுதி மக்களில் நல்லவர், கெட்டவர் யார் யார் என்பதைப் புரிந்து கொள்ளும் உரிமை இல்லையா? இது மயிலப்பன் சேர்வைக்காரரது ஆதங்கம்.

தனது கட்டளையை மீறிய சித்திரங்குடி சேர்வைக்காரரை கொன்றுவிட வேண்டும் என்ற நிலையை நாளடைவில் சின்னமருது சேர்வைக்காரர் ஒருவகையாக மாற்றிக்கொண்டார். கட்டுப்பாட்டைக்கருதி, இயக்கத்தின் தலைமை முடிவிற்கு இனிமேல் உடன்படுவதாக மயிலப்பன் சேர்வைக்காரரும் இணக்கம் தெரிவித்தார். இயக்கத்திற்குள் தொடக்க நிலையில் தலைவர்களிடையே ஏற்பட்ட இத்தகைய கருத்து வேறுபாடுகள் நல்ல வேளையாக நலிந்து மறைந்தன.