68
4.சமயங்களும் கொல்லாமை புலால் உண்ணாமையும்
சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உணவாக அருந்துவது தீவினையாகாதென்றும்,ஆகவே ஊனுணவு கொள்பவர்கள் அதனை நீக்குவது வேண்டப்படாதென்றும் விரித்துத் தமக்குத் தோன்றிய ஏதுக்களை ஒருவர் எடுத்துக் காட்டினார். இவரைப் போலவே இங்ஙனம் கூறுவார் இன்னும் சிலர் ஆங்காங்கு உளராதலின், அவர்கள் கூறுவனவற்றை ஆராய்ந்து முடிவு கட்ட வேண்டுவது இன்றியமையாததா யிருக்கின்றது. உலகின்கண்ணுள்ள எந்த மதத்தவரும் ஊனுணவு கொள்வதை மறுப்பதில்லையென்று சொல்லுகின்றார். பண்டைக் காலந்தொட்டுச் சைவ சமயத்தவர்கள் எந்த உயிரையுங் கொல்லுதல் ஆகாதென்றும், கொன்று அதன் ஊனை உண்ணுதல் தீவினையாமென்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்குக் 'கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங் கோள்களவு கல்லாமல்' என்னும் பட்டினத்தடிகள் திருமொழியும், “கொல்லா விரதம் ஒன்று கொண்டாரே நல்லோர்” என்னும் தாயுமான அடிகள் திருமொழியுமே யாவரும் அறிந்த சான்றாகும். இனித் தேவார திருவாசகங்கள், திருமந்திரம் முதலான சைவத் திருமுறைகளிலும், சைவ சித்தாந்த நூல்களிலும் கால்லாமை புலாலுண்ணாமை ஆகிய அறங்களை நன்கு எடுத்து அறிவுறுத்தும் திருமொழிகள் அளவில்லாதன. அவற்றை விரிப்பிற் பெருகும். சைவ சமயத்தின்கட் சொல்லப்பட்டவாறே அதனைப் பின்பற்றி ஒழுகும் சைவ வேளாளரும், பார்ப்பனரும் பண்டைக் காலந்தொட்டுக் கொலையும் புலையும் நீக்கி ஒழுகி வருகின்றனர்.