70 |
❖ மறைமலையம்-1 ❖ |
வனாய் அன்பில்மட்டும் சிறந்தானாதல் வேண்டும். மேலும் அவன் இழிகுலத்தானாகலின், அவர் வடநாட்டில் அறிவுறுத்திவந்த அறமொழிகளை அறியானாய் அவரது பெருமையை மட்டும் பிறர் கூறக்கேட்டு அறிந்தவனாய் அவரை அன்போ டேற்றுத் தானுண்ணும் பன்றி இறைச்சியை அவர்க்குங் கொடுத் தானாகல் வேண்டும். அல்லது, அவ்விறைச்சியைச் சோற்றில் மறைத்துக் கலந்துகொடுத்தான் என்பதனால், அவர் ஊன் உண்ணார் என்பதைத் தெரிந்தே தானுண்ணும் ஊனுணவைச் சிறந்ததாகக் கருதி, அவர்க்கும் அதனை ஊட்டுதல் வேண்டு மென அன்பு மேலீட்டினாற் சோற்றின்கண் வைத்து மறைத்துக் கொடுத்தானாகல் வேண்டும். இவன் தந்த இவ்வூனுணவு புத்தரது முடிவிற்கு ஏதுவானமை பற்றி அவர்தம் சீடர்கள் (மாணாக்கர்கள்) அவன் மேற் பெரிதும் வெகுண்டனர் என்பதனைப் புத்தருணர்ந்து, அவர்க்கு ஆறுதல் சொல்லி அத்தட்டானுடைய அன்பையே வியந்துபேசி உயிர்விடுத்தனர்.ஆதலாற், புத்தர் கொல்லாமை, புலாலுண்ணாமை என்னும் அறத்திற் றலைநின்றவர் என்பது ஐயுறற்பாலதன்று. மேலும், ஊனுணவு புத்தரது முடிவிற்கு ஏதுவாயிற்று என்பதனால்,ஊனுணவு கொள்வதன் தீமையும் இவ்வரலாற்றினால் நன்கு விளங்கா நிற்கும்.
இன்னும் புத்தரையடுத்துத் தோன்றி உலகமெங்கணும் அவர்தம் அறமொழிகளைப் பரவச்செய்து வந்த அசோக மன்னன் தான் செதுக்கிய முதற் கல்வெட்டில், “உணவுக் காகவாவது,வேள்வி வேட்கும் பொருட்டாகவாவது எந்த உயிரையுங் கொலைசெய்தல் ஆகாது” என்று என்று பொறித் திருத்தலும், எட்டாவது கல்வெட்டில் "மூச்சுவிடும் எந்த உயிரையுங் கொலை செய்யப்படுதலினின்றும், பலியிடப் படுதலினின்றும் முற்றும் விலக்குதலால் மட்டுமே சமயமானது வளரும்” என்று பொறித்திருத்தலும் புத்தருடைய கொல்லாமை, புலாலுண்ணாமை அறத்தை நன்கு விளக்கிக் காட்டும்.
இனி, யூதர்க்கும் கிறித்துவ சமயத்தவர்க்கும் முதனூலாகிய பைபிலின் முதலாகமத்திற் கடவுள் உலகங்களைத் தோற்றுவித்து மக்கட்கு முதற்றாய் தந்தையரைப் படைத்தபின் அவரை நோக்கி,