பக்கம்:மறைமலையம் 1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
x

❖ மறைமலையம்-1 ❖


“மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால்
சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக்
குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர்
அமரர் மறைமலை யார்”

எனப் பாடிப் பரவினார். ‘தனித் தமிழ்த் தந்தையார்’ என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார்.

“நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக
எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய
செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை
பைந்தமிழ் காக்கும் படை”

என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புக்களின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார்.

பல்துறை ஆற்றல்

அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார்.

மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை

“பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள்” என்கிறார். (பனிமலை இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்).

அடிகளார் நூல்கள்

அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/11&oldid=1599273" இலிருந்து மீள்விக்கப்பட்டது