பக்கம்:மறைமலையம் 1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
81

அமைந்த இரத்தக்குழாய்கள் அவ் அழுகற்சாறுகளால் அடை பட்டுப் போக, உடனே அவர்கள் வயிறு குமட்டிக் கக்கியுந் துப்பியும் சளிகளை உமிழ்ந்துங், கடுங்காய்ச்சலும், வீக்கமும் வயிற்றுவலியும் நரம்பு வலிப்புங் கொண்டுந் துன்புற்றுத் துடிதுடிக்கின்றனர்.ஆனால், இவ்வாறு துன்புற லானது எதனால் என்றறியாமல் திகைத்து, உடனே மருத்துவரைத் தம்பால் வருவிக்கின்றனர். அம் மருத்துவரும் இஃது எதனால் வந்ததென்ற றியாமல் அவருந் திகைக்கின்றனர். மற்று, உண்மை யுணர்ந்தவர்களோ இவ்வளவு துன்பமும் ஊன் உண்டமையால் வந்ததென்பதனை நன்குணர்வர். காய்கறிப் பண்டங்களைத் துகளாக அரைத்துக் கொடுக்குந் தட்டைப் பற்கள் வாய்ந்த மக்கள்,அக் கனிகாய் கிழங்குகள் வித்துக்களையே உட்கொள்வார்களாயின்,அவை அப்பற்களால் நன்றாய் அரைக்கப்பட்டுத் தீனிப் பையிற் சென்றவுடனே எளிதிற் செரித்து, இரத்தத்திற் கலந்து உடம்பை நல்லநிலையில் வைக்கும்; மற்று அவ்வியற்கைக்கு மாறாகப் பல்வகை இறைச்சிகளையுந் தின்பராயின், அவர்தம் பற்கள் அவற்றைச் செவ்வனே கிழித்து நீர்ப்பதமாக்க மாட்டாமையின்,அவ்விறைச்சி சிறு சிறு துண்டுகளாக வயிற்றினுட் சென்று செரிமானமாகாமல் நின்று மேற்கூரிய கொடு நோய்களை யெல்லாம் வருவிக்கின்றனவென்று மேற்காட்டிய ட்ரால் என்னும் ஆசிரியரே இவ்வுண்மை நிகழ்ச்சிகளை நன்கெடுத்து விளக்கினார். ஆகவே, மக்களின் பல்லமைப்புச் சைவவுணவு கொள்ளுதற்கே ஏற்றதென்பது தெற்றென விளங்கும். இவ்வுண்மையினை மேல்நாட்டாசிரியரைப் போல் நன்கு ஆராய்ந்து பார்க்கமாட்டாதார், மக்களின் பல்லமைப்புப் புலாலுணவு கொள்ளுதற்கே ஏற்றதெனப் பகுத்தறிவின்றியுரைத்துத் தாம் மறவிலங்குகளுக்கு இனமுடைய ராதலைக் காட்டுவராதலின்,அவர்தம் புல்லிய வெள்ளறிவுரை யினை நம்பி எவரும் புலாலுணவு கொள்ளுந் தீவினைப் படுகுழியில் வீழாதிருப்பராக!

இனிப் பகலவன் வெப்பம் மிகுந்த நாடுகளில் உள்ளார்க்குப் புலாலுணவு வேண்டப்படாதாயினும் பனியுங்குளிரும் மிகுந்த வடமுனை தென்முனைகளையடுத்த நாடுகளில் உள்ளார்க்குப் புலாலுணவு இன்றியமையாததாகும் என்று முழக்கம் இடுவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/114&oldid=1597320" இலிருந்து மீள்விக்கப்பட்டது