❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
இங்குள்ள காடுகளில் ஏராளமாய்க் கிடைக்கும் மான் மரை கடம்பை பன்றி முதலான மெல்விலங்குகளை இரையாகக் கொன்றுதின்று, ஊன் உண்ணும் பழக்கத்தை விடாவாய் அதன்கண் நிலை பெற்றன. ஆகவே வடமுனை நோக்கிச்சென்று ஆங்குச் சிலகாலம் வைகி, மீண்டுந் தென்பகுதியிற் புகுந்து குடியேறிய வல்விலங்குகளாலும் நாகரிகம் இல்லா மக்களாலுமே ஊனுணவு பரவலாயிற்றென்க.இவ்வாற்றால் வடமுனை நோக்கிச் சென்ற சிற்றுயிர்களும் நாகரிக அறிவில்லா மக்களுமே தாம் ஊனுணவு கொள்ளுங் கொடுந்தீவினையை முதன்முதற் கற்றுக் கொண் டார்கள் என்பதும் அதற்குமுன் இந்நிலத்தின் நடுவரையைச் சார்ந்த எல்லா இடங்களிலும் இருந்த எல்லா உயிர்களும் மரக்கறியுணவினையே உட்கொண்டு உயிர் வாழ்ந்தன என்பதும் நன்கு பெறப்பட்டன.
இனிப்,பண்டைநாளில் வடமுனையை நோக்கிச் சென்ற மக்கள் அறிவும் நாகரிகமும் இல்லாதவர்களாகலின்,தாம் சென்ற அந்நிலங்களிற் காய் கனி கிழங்குகள் கிடையாமை கண்டு,இக்காலத்திற் போல அவை தம்மைப் பிறநாடுகளிலிருந்து வருவித்துக் கொள்ளும் வகையறியாராய்த், தம்மினுந் தாழ்ந்த விலங்குகளைக் கொன்றுஞ், சில வேளைகளில் தம்மிலேயே ஒருவரை யொருவர் கொன்றும் அவ்வழியாற்பெற்ற இறைச்சியை உணவாகக் கொள்ள வேண்டியவரானார்கள். அக்காலத்திருந்த அறிவில்லா அம்மக்கட்கு அப் பனிநாடுகளிற் புலாலுணவு இன்றியமையாததாய் இருந்தது கொண்டு, நீராவிப் பொறிகளின் உதவியால் நாகரிகமும் அறிவும் நாளுக்குநாள் விஞ்சும் இக்காலத்தில் அப் பனி நாடுகளில் இருப்பார்க்கும் புலாலுணவு இன்றியமையாதது என்பார் அறிவில்லாப் பேதைமாக்களே யன்றி, அறிவுடைய மேன்மக்கள் அங்ஙனஞ் சொல்லார். ஒன்றுக்கொன்று ஆறாயிரம் நாழிகைவழி விலகிக்கிடக்கும் நாடுகளிலுள்ளார் எல்லாம் மிக அருகிலிருப்பாரை ஒப்பத் தத்தம் நாடுகளிலுள்ள விளைபொருள்களை மாற்றிக் கொண்டு ஊன் சிறிதும் உண்ணாமற் சைவவுணவினாலேயே எளிதாய் இனிது வாழ்தற்கான இசைவுகள் நன்கு வாய்த்திருக்கும் இந்நாளிலும் பனி நாடுகளில் உள்ளார்க்குப் புலாலுணவு இன்றியமை யாததாகுமோ? அறிஞர்களே கூறுங்கள்!