பக்கம்:மறைமலையம் 1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84

❖ மறைமலையம் 1 ❖

அற்றன்று. பனி நாடுகள் குளிர் மிகுந்திருத்தலால்,அங்குள்ள மக்களின் உடம்புகளில் வேண்டிய அளவுக்குச் சூடுண்டாக்கும் உணவே வேண்டியிருத்தலாலும்,அங்ஙனம் உடம்பிற் சூடு பிறப்பிப்பது புலாலுணவேயல்லாமல் மரக்கறியுணவு அல்லாமை யாலும் அவர்கட்கு ஊனுணவே சிறந்ததாமெனின்,அது பொருந்தாது. உடம்பிற்கு ஆற்றலையுஞ் சூட்டையுந் தருதற்குரிய பசைமாவுஞ் சர்க்கரையுங் கொழுப்புஞ் சைவ உணவுப் பண்டங்களிலேயே மிகுந்திருத்தலை, இந் நூலின் துவக்கத்திலேயே நன்கெடுத்துக் காட்டி விளக்கியிருக்கின்றேம். தயிர்,பால்,நீர்,கோதுமை,உழுந்து, வெண்ணெய்,நெய்,எள்நெய், கற்கண்டு, சீனி முதலான உணவுப் பொருள்களைச் செரிக்கும் அளவறிந்து உண்பவர்களுக்கு, எத்தகைய முயற்சியுஞ் செய்யக்கூடிய வலிவுஞ் சூடுந் தக்கபடி உண்டாகும். இவற்றின் பொருட்டுச் சிற்றுயிர்களின் இறைச்சியை யுண்ணவேண்டு மென்றுரைப்போர்,உடம்புகளின் கூறுகளை வளர்க்கும் உணவுப் பண்டங்கள் இன்னவையென்று ஆராய்ந்து அறிய மாட்டாதவராவர். சிற்றுயிர்களின் உடம்பிலுள்ள சர்க்கரையுங் கொழுப்பும் அவ்வுயிர்களாற் பல முயற்சிகளின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டவைகளே யாதலால், அவற்றின் ஊனிலுள்ள அவை சாறுகழிந்த சக்கைகளே யாகும்; அச் சக்கைகளை உட்கொள்வார்க்கு ஆற்றலுஞ் சூடும் எங்ஙனம் வரும்? மற்றுப், புற்பூண்டு மரஞ் செடி கொடிகளின் பயனான இலை,பூ,காய் கனி கிழங்கு வித்துக்களில் உள்ள சர்க்கரையுங் கொழுப்புமோ எத்தகைய முயற்சியின் பொருட்டும் பயன்படுத்தப்படாதன ஆகும். ஆகவே, அவை மக்களுடம்பில் ஆற்றலையுஞ் சூட்டையும் உண்ட உண்டாக்குதற்கு முதற்றரமாவன வாகும். இவ்வளவு சிறந்த இச் சைவவுணவைவிட்டு இரண்டாந் தரமான ஊன் சக்கைகளே குளிர் நாடுகளில் உள்ளார்க்கு வலிவையுஞ் சூட்டையுந் தருமென்று அச்சக்கையைப் பிடித்துக் கூறுவார் அறிவு வெறுஞ் சக்கையே யாகுமல்லாற் சாறுடையதாகுமோ? கூர்ந்து பார்மின்கள் அறிஞர்களே!

இனிப்,பனிநாடுகளில் உள்ளாரெல்லாம் புலாலுணவே கொள்கின்றா ரென்பதும் உண்மையுணராதார் வெற்றுரையாம். நம்மை யாளும் ஆங்கில நன்மக்கள் வாழும் இங்கிலாந்து தேயத்திற்கு வடக்கின்கண் உள்ளதான ஸ்காட்லாந்து தேயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/117&oldid=1572493" இலிருந்து மீள்விக்கப்பட்டது