பக்கம்:மறைமலையம் 1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
85

பனியுங் குளிரும் மிக்கதென்பது நில நூலறிஞரும் பள்ளிக்கூடச் சிறுவருங்கூட நன்குணர்வர். அந்நாட்டிலுள்ள மக்கள் ஒட் டரிசியிற் செய்த அப்பமும் உருளைக்கிழங்கும் பாலும் வெண்ணெயுமே உணவாகக் கொள்ளுகின்றார்கள். இவர்களின் வாழ்க்கை நிலையைக் கண்டுணர்ந்த ஆடம் ஸ்மித் (Adam smith) என்னும் பொருள் நூல் ஆசிரியர், “கசாப்புக் கடைக்காரன் தரும் இறைச்சி சிறிதும் இல்லாமலே, வித்துக்களுங் காய்கறி களும், பால் வெண்ணெய் பாற்கட்டி எண்ணெய் முதலியனவுஞ் சேர்த்து மிகவுஞ் செழுமையான, மிகவும் நலந்தருவதான, மிகவும் உடம்பை வளர்ப்பதான, மிகவும் உடம்பைத் தேற்றுவதான நல்லுணவாகுமென்பது நாம் பழக்கத்தாற் கண்டறிந்ததாகும் என மொழிந்திருக்கின்றார். ஐரோப்பா அமெரிக்கா என்னுந் தேயங்களின் ஊடு சென்று ஆங்காங்கு மக்கள் வாழ்க்கையின் இயல்புகளை நன்கு கண்டறிந்த அவ்வர்ட் மால்கம் (Rev Howard Malcolm) என்னும் கிறித்து சமய குரு ‘யான் கண்ட மிக நேர்த்தியான மக்களுடம்பின் அமைப்புகளில் மிகச் சிறந்தது அயர்லாந்து தேயத்திலுள்ள மக்களின் உடம்பேயாகும்; இம்மக்கள் ஒருகாலும் ஊனுணவைச் சுவைத்ததேயில்லை' என மொழிந்திருக்கின்றார்.3 இவ்வாறு குளிரும் பனிக்கட்டியும் நிறைந்த ஸ்காட்லாந்து, அயர்லாந்து முதலான நாடுகளிலுள்ள நன்மக்கள் பலருஞ் சைவவுணவே உட்கொண்டு உடம்பிற் சூடுஞ் சுருசுருப்பும் உடையராய் இனிது உயிர்வாழ்ந்துவரல் கண்கூடாய் அறியப்பட்டிருத்தலின்,பனி நாடுகளில் உள்ளார்க்கு ஊனுணவு இன்றியமையாதது என்று உரைப்பார் உண்மை யுணர்ந் தாராவரோ? சிறிதும் ஆகாரென விடுக்க.

இனி, நாம் உண்ணும் உணவிலும் பருகும் நீரிலும் எண்ணிறந்த சிற்றுயிர்கள் நம் கண்களுக்குப் புலனாகாமல் இருக்கின்றன; பெருக்குகண்ணாடி (Microscope) யினுதவி கொண்டு நோக்குவாமாயின், அவை எத்தனை கோடிக்கணக்காய் நம் உணவுப் பொருள்களிலும் பாலிலும் நீரிலும் ஏனையவற்றிலும் நிறைந்திருக்கின்றன என்பதை அறியலாம்; நாம் உள்ளிழுக்கும் மூச்சிலும் எத்தனையோ கோடிக்கணக்கான சிற்றுயிர்கள் சேர்ந்து நம்முடம்பின் உட்செல்லுகின்றன; இங்ஙனம் ஒவ்வொரு நொடியும் நாம் எண்ணிறந்த உயிர்களைக் கொலைசெய்பவர்களாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/118&oldid=1597322" இலிருந்து மீள்விக்கப்பட்டது