பக்கம்:மறைமலையம் 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86

❖ மறைமலையம் 1 ❖

இருக்கையில், இறைச்சி தின்பது ஒன்றுதானா கொலைக் குற்றமாகும்? என்று சிலர் வினாவுகின்றார்கள். நமது உயிர் வாழ்க்கையில் நம்மால் விலக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் நம்மால் விலக்கக்கூடாத நிகழ்ச்சிகளும் என இரு பகுப்புகள் இருக்கின்றன. நம்மால் விலக்கக்கூடிய நிகழ்ச்சிகளிற் குற்றமாவன இருந்தாற் பகுத்தறிவுடைய நாம் அவற்றை விலக்கி யொழுகக் கடமைப் பட்டிருக்கின்றோம். நாம் செய்யும் ஒரு தொழில் பிறவுயிர்க்குத் துன்பந் தருவதென்றும்,அதனை விலக்கி யொழுகுவது அவ்வுயிர்க்கும் நமக்கும் நன்மையையே தருமென்றும்,அதனை அங்ஙனம் விலக்கி யொழுகுவது நம்மால் எளிதிற் செய்யக்கூடியதே யாமென்றும் நாம் நன்கறிந்திருக்கையில்,நாம் அறிந்த அவ்வண்ணம் நடவாமாயின், அது நம்பாற் பெருங்குற்றமேயாதல் திண்ணமன்றோ? ஒருவரிடத்துள்ள ஒரு குற்றத்தையெடுத்து மற்றொருவரிடத்து ஒருவன் பேசுவதை நாம் நாடோறும் காண்கின்றோம். இங்ஙனம் அவன் பேசுவதால் அவரைப் பிறர் இழிவாக எண்ண அதனால் அவர் உளம் வருந்துகின்றார்; ஆகவே, புறங்கூறுதலானது பிறர்க்குத் துன்பந் தருவதென்பதைப் புறங்கூறுவோன் நன்கறிந்திருக்கின்றான்;புறங்கூறுவோனை மக்கள் எல்லாரும் அருவருத்துவிடுதலாற்,புறங்கூறுதல் தனக்குத் தீங்குதருவதென்பதை அவனும் உணர்கின்றான்;அப் புறங்கூறுதலை விட்டுப் பிறரை உயர்த்துப் பேசி எல்லார்க்கும் இனியனாய் ஒழுகுதலே தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தருவதென்பதும்,அவ்வாறு நல்லவனாய் நடப்பது எளிதிற் செய்யக் கூடியதேயாமென்பதும் அவன் செவ்வனே அறிந்தும்,அவன் அங்ஙனம் அறிந்தபடியே நடவானாயின்,அஃது அவன்மேற் பெருங்குற்றத்தைச் சுமத்துமன்றோ? ஒருவர்மேற் பிறரொருவர் புறங்கூறுவது வழக்கமாயிருத்தலாற்,புறங்கூறுஞ் செயல் குற்றமாகாதென எவரேனுங் கூறத் துணிவரோ? துணியாரன்றே. அதுபோலவே,ஆடு மாடு கோழி குருவி கொக்கு குயில் மீன் முதலான சிற்றுயிர்களை அவற்றின் இறைச்சிக்காக மக்கள் கொலை செய்கையில்,அவை எவ்வளவு துடிதுடித்துத் துன்புறுகின்றன! அங்ஙனம் அவை துன்புறக் கொன்று பெற்றுத் தின்னும் இறைச்சியாவது தன்னைத் தின்பார்க்கு நலந்தருகின்றதா? அதுவுமில்லையே! இறைச்சி தின்பார்க்கு அது வயிற்றுவலி, மலச்சிக்கல், அளவுக்கு மிஞ்சிய சதை, இரத்தக்குழாய்களிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/119&oldid=1572495" இலிருந்து மீள்விக்கப்பட்டது