❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
கொழுப்படைத்தல், கைகாற்பிடிப்பு, இருமல், எலும்புருக்கி, காமாலை, பிளவைக்கட்டி, நீரிழிவு, கொறுக்கு, படை, கடுங்காய்ச்சல், பெரும்பாடு முதலாக எண்ணத் தொலையாத நோய்களை வரிசை வரிசையாய்க் கொடுத்து அவரை வகைமாளச் செய்கின்றதன்றோ! இங்ஙனமாகத் தாமும் அளவில்லாத் துன்பத்தையடைந்து மேற் காட்டிய சிற்றுயிர்கட்குந் துன்பத்தைத் தருதற்கு ஏதுவான உயிர்க்கொலையின் தீமையை நன்கு அறிந்து வைத்தும், அது வழக்கமாக உள்ளதுதானே என்று பகுத்தறிவில்லா விலங்குகளைப் போற் பகுத்தறிவுடைய மக்களுஞ் செய்யலாமோ? இத்தகைய பெரும் பொல்லாங்கான உயிர்க்கொலையையும் புலாலுணவையும் அறவே நீக்கி, மரஞ் செடி கொடிகளின் பயனான சைவ உணவுப் பண்டங்களை உட்கொண்டு உயிர்வாழ்தலாற் பிறவுயிர்க்கும் மக்களாகிய தமக்கும் எவ்வளவு நன்மையுண்டாம்! மேலும், புலாலுணவை நீக்குவது வருத்தமான செயலும் அன்று; அஃது எளிதின் முடிவதேயாம். ஏனென்றால், சைவ உணவுப் பண்டங்களைக் கலவாமல் இறைச்சியை மட்டும் விலங்குகளைப் போல் தின்பது மக்களாற் சிறிதும் ஏலாது; ஆனால், இறைச்சியில்லாமற் சைவ உணவுப் பண்டங்களை மட்டும் அருந்தி இனிது உயிர்வாழ்தலோ மக்கட்கு எளிதிலே சைவதாகும்; அதற்காக மிகுந்த பொருட்செலவு செய்யவேண்டுவது மில்லை. இவ்வாறு எளிதிற் கிடைப்பதும், பிறவுயிர்க்குத் தீங்கில்லாததுந், தன்னை உண்பார்க்கு மிக்க உடல் நல மனநலங்களைத் தருவதும் ஆன சைவவுணவை விடுத்து, ஐந்தறிவு உயிர்களைத் துடிதுடிக்க கொல்லுங் கொலைத் தொழிலால் வரும் புலாலுணவை உட்கொள்ளுதல் பகுத்தறிவுடைய மக்களுக்குத் தகுதியாமோ?
நாம் உட்கொள்ளுஞ் சைவ உணவுப் பண்டங்களிலும் நீரிலுங் கணக்கற்ற சிற்றுயிர்கள் நம் கட்புலனுக்குத் தென்படாமலிருந்தால், அதற்கு நாம் என் செய்யலாம்! நம் மனமாரத் தெரிந்தவைகளையே நாம் கொல்லாமல் விலக்கி யொழுகக் கடமைப்பட்டிருக்கின்றோம். நமக்குத் தெரியாதவைகளைப் பற்றி, நம்மால் விலக்கக்கூடாதவைகளைப் பற்றிக் கவலையெடுத்தலால் யாது பயனுண்டு? எவருந் தாம் அறிந்த, தம்மால் விலக்கக் கூடிய தீமைகளைத் தாம் தாம் விலக்கலாம்; தம்மால்