❖ மறைமலையம் 1 ❖ |
அறியப்படாமலும், அங்ஙனம் அறியப்படாமையால் தம்மால் விலக்கக் கூடாமலும் வரும் நன்மை தீமைகளுக்கு எவரும் பொறுப்பாளியாகமாட்டார். தமக்குத் தெரியாமலுந் தம்மால் விரும்பப்படாமலுந் தம் வயிற்றினுள்ளே எண்ணிறந்த சிற்றுயிர்கள் நுழைவது கொண்டு, ஆடு மாடு முதலான சிறந்த பயனுள்ள விலங்குகளைத் தாம் வேண்டியபடி செந்நீர் ஒழுகக் கான்றுங் கொல்லுவித்தும் நெஞ்சார அவற்றின் ஊனை உண்பது குற்றமாகாதென எந்த அறிஞனேனுங் கூறத் துணிவனோ? மரஞ் செடி கொடிகள் புற்பூண்டுகளும் உயிர் உடையனவென்பது உண்மையே; ஆனால், இவ் ஓரறிவுடைய உயிர்களை நாம் உணவாகக் கொள்வது குற்றமாகாதது கொண்டு, ஐந்தறிவுடைய ஆடு மாடு மீன் முதலியவைகளை உணவாகக் கொள்வதுங் குற்றமாகாது என்னலாமோ? ஆடு மாடு மீன் முதலியவைகளை உண்ணாது நாம் உயிர்வாழலாம், ஆனால் புற்பூண்டுகளையும் அவற்றின் பயன்களையும் உண்ணாது நாம் உயிர்வாழ்தல் கூடுமா? ஆடு மாடு முதலியவைகளைப் பிறர் கொல்லப் புகும்பொழுது, அவை தம் உயிர் தப்பிப்பிழைக்க எவ்வளவோ முயன்று துடிதுடிக்கின்றன! அதுபோற் புற்பூண்டுகளையும் அவற்றின் பயன்களையும் நாம் கைக் கொள்கையில், அவைகளும் தம் உயிர் தப்ப முயன்று ஓடுகின்றனவா? சிறிதும் இல்லையே. ஆடு மாடு மீன் முதலியவைகளைக் கொன்று கைக்கொள்ளும் இறைச்சி, இரத்தம் ஒழுகித் தீய முடைநாற்றம் வீசுவதுபோற் புற்பூண்டு முதலியவைகளும் அவற்றின் பயனும் இரத்தஞ் சிந்தி நாறக் கண்டதுண்டோ? ஈரறிவு முதல் ஐந்தறிவுகாறுமுள்ள எல்லாச் சிற்றுயிர்களின் இறைச்சியும் இரத்தமும் முடை நாற்றமும் வீசி அருவருக்கத்தக்கதாயிருக்க, ஓரறிவுள்ள புற்பூண்டுகளும் அவற்றின் பயனான இலை பூகாய்கனி கிழங்குவித்து முதலியனவும் எவ்வளவு நறுமணங் கமழ்ந்துநாவுக்குச் சுவையும் உடம்புக்கு நலமும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியுந் தருகின்றன! ஆகவே, இத்தனை வேறுபாடுமுடைய ஊனையுங் காய்கறியுணவினையும் ஒன்றென்றல் பேதைமையுங் கொடுமையும் இரக்கமற்ற வன்னெஞ்சமும் உடையோர் புல்லுரையேயாதல் தெற்றென விளங்காநிற்கும்.
மேலும், நம்மால் விலக்க முடியாத சில சிறு குற்றங்கள் நம்மிடம் இருப்பது பற்றி, நம்மால் விலக்கக் கூடிய