பக்கம்:மறைமலையம் 1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
89

பெருங்குற்றங்களையும் நாம் செய்யலாம் என்று செருக்குடன் கூறுவார் தம் மடமை பெரிதும் அஞ்சற்பாலதாம். எவ்வளவு நறுமணங்கமழுஞ் சுவைப்பண்டங்களை நாம் உண்டாலும், அவையெல்லாம் நம் வயிற்றின் கீழ் அருவருக்கத்தக்க மலமாய் மாறிவிடுகின்றன; இவ்வாறுண்டாகும் மலம் நமது மலக் குடலில்லில் இல்லாத நேரமே இல்லை. இங்ஙனம் மக்களது அடிவயிற்றினுள்ளேயே மலம் இருத்தல் கொண்டு மக்களெல்லோரும் மலத்தையே திரளைதிரளையாக எடுத்துச் சாப்பிடலாம் என்று கூற ஒருவர் முன்வருவராயின் அவரது அறிவையும் அவரையும் உலகத்தார் என்னென்று கொள்வர்! அவரை அறிவு திரிந்த வெறியரென இகழ்ந்து நகைப்பரல்லரோ! எத்தனை முறை குளித்தாலும் நமதுடம்பில் அழுக்கு இருத்தலால், நாம் குளித்தலே வேண்டாமெனக் கூறலாமோ? அங்ஙனமே, நாம் எத்தனை முறை எத்தனை நூல்களைக் கற்றாலும், நாம் அவற்றின் சொற்பொருள்களை மறந்துவிடுதலால், நாம் கல்விகற்றலே வேண்டாமெனக் கரையலாமோ? இங்ஙனமெல்லாம் நம்மனோரிடத்தில் விலக்கமுடியாத சில சிறு குற்றங்கள் இருப்பது கொண்டு, அவர்கள் பெருங்குற்றங்களைச் செய்யலாமெனவும் அப்படிச் செய்வது குற்றமாகாது எனவும் பகர எவரேனும் ஒருப்படுவரோ? ஒருப்படாரன்றே! அவை போலவே, நாம் அறியாமலும் நாம் விரும்பாமலும் இருக்க, நம் கட்புலனுக்கு அகப்படாத நுண்ணிய சிற்றுயிர்கள் பல நாம் உண்ணுஞ் சைவ உணவுப்பொருள்களிலுங் கலந்து நம்மால் விலக்க முடியாதபடி நம் வயிற்றுனுட் செல்வது குறித்து, நம்போல் ஐந்தறிவும் உடம்பின் அமைப்பும் வாய்ந்த ஆடு மாடு கோழி கொக்கு மீன் முதலான சிற்றுயிர்களையும் நாம் நம் நெஞ்சார விரும்பிக் கொன்றும் கொல்வித்தும் அவற்றின் ஊனைத் தின்பமானால், அது மன்னிக்கப்படாத பெருங்குற்றமாய் முடியுமென்று உணர்ந்துகொள்க.

அஃது உண்மையேயென்றாலுஞ், சிற்றுயிர்களிலேயே ஒன்று மற்றொன்றைப் பிடித்துத் தின்று உயிர்வாழ்தல் இயற்கை நிகழ்ச்சியாய்க் காணப்பட்டு வருதலால், மக்களும் பிற சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்பது குற்றமாகாதெனின்; நன்று சொன்னாய்; சிற்றுயிர்கள் ஒன்றையொன்று பிடித்துத் தின்னல் போல, மக்களுந் தம்முள் ஒருவரையொருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/122&oldid=1597324" இலிருந்து மீள்விக்கப்பட்டது