❖ மறைமலையம் 1 ❖ |
கொன்று தின்னல் வேண்டுமெனக் கூறுதல் வேண்டும். காட்டுமிராண்டி வகுப்பினர் சிலர் தம்முள்ளே ஒருவரையொருவர் கொன்று தின்றுவிடுகின்றனர். இங்ஙனமாகப் பகுத்தறிவில்லாக் காட்டுமிராண்டிகள் செய்யுங் கொடுஞ் செயலைப் பார்த்துப் பகுத்தறிவுடைய மக்களும் அவ்வாறு செய்தல் இயற்கை தானென்று சொல்லித், தம்முள் ஒருவரையொருவர் கொன்று தின்னலாமோ? அதுவேயுமன்றிச், சிற்றுயிர்களின் வாழ்க்கையே இயற்கைக்கு ஒத்ததென்று கருதி, அதன்படி நடக்கப் புகுந்தால், மக்கள் வாழ்க்கையானது தாழ்ந்த காட்டுவிலங்குகளின் வாழ்க்கையாய், ஊரெல்லாங் காடுகளாய் மாறல் வேண்டும். விலங்குகளைப்போல் நாகரிக மக்களும் ஆடையின்றில அம்மணமாய் உலவுதல் வேண்டும்; அவைகள் வீடுவாய்தலின்றி மரங்களின் கீழும் மலைக்குகைகளினுள்ளுந் தங்கியிருத்தல்போல அவர்களும் வீடுவாய்தலைத் துறந்து மரங்கள் மலைக் குகைகளில் தங்கல் வேண்டும்; அவைகளுட் சில மற்ற உயிர்களை அடித்துக் கொன்று அவற்றின் சதையைப் பச்சையாய்க் கிழித்துண்டல் போல, அவர்களும் விலங்குகளைக் கொன்று பச்சையாகஅவற்றின் இறைச்சியைத் தின்னல் வேண்டும்; அவைகளுட் பன்றி முதலான சில விலங்குகள் மலத்தைச் சாப்பிடுதல் போல, அவர்களும் மலத்தை விழுங்குதல் வேண்டும்; அவைகளெல்லாம் கல்வி கற்கவும் கடவுளை வணங்கவும் அறியாமைபோல, அவர்களுங் கல்வி கல்லாமலுங் கடவுளை வணங்காமலுங் காலங் கழித்தல் வேண்டும். இங்ஙனமெல்லாம் விலங்கின் இயற்கைகளோடு ஒப்ப, நாகரிக மக்களும் நாகரிக வாழ்க்கையைவிட்டு உயிர் வாழல் கூடுமாயினன்றோ, அவர்கள் அவைகளிற் சிலவற்றைப்போல் ஊன்தின்று உயிர் வாழ்தல் பொருந்துவதாகுமா? நாகரிக மக்களின் வாழ்க்கையானது விலங்குகளின் வாழ்க்கைக்குமுற்றும் மாறுபட்டதாயிருக்கையில், ஊன் தின்பதற்கு மட்டும் அவற்றின் இயற்கையை அவர்கள் பின்பற்றல் வேண்டுமெனச் சிறிதும் ஆராயாது கூறுவார் கூற்றின் மடமைப் பெருக்கை என்னென்று புகல்வேம்! அறிஞர்களே ஆழ்ந்து பார்மின்கள்!
இனித், தலையிற் புழுக்கும் பேன்களையுந், தலையணை பாய் படுக்கை மூட்டுக்களிற் புழுக்கும் மூட்டுப் பூச்சிகளையும், மோட்டுவளையிலுள்ள எலிகளையும் மக்கள் கொல்ல