❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
வேண்டியவர்களாய் இருத்தலால், அவர்கள் தம் உடம்பு வளர்ச்சியின் பொருட்டு உயிர்களைக் கொல்ல வேண்டியவர்களா யிருக்கின்றனரெனப் புலாலுணவு கொள்வார் சிலர் புகல்கின்றனர். இவர்கள் தமது நலத்தின் பொருட்டுத் தம்மோடொத்த மக்களைக் கொன்றுவிடுதலுங் குற்றமாகாதெனச் சொல்வதற்குப் பின்வாங்கார். அருளொழுக்கமுடையராய் உயிர் வாழ விரும்பும் மேன் மக்களோ இத்தகைய கொடியோர் சொல்லுங் கொடுஞ் சொற்களுக்குச் சிறிதுஞ்செவி கொடுத்தலாகாது. பேன், மூட்டுப்பூச்சி, எலி முதலானவைகள் நாம் இருக்கும் இல்லங்களில் உண்டாதற்கும் வருதற்கும் இடஞ் செய்யாமல் இருப்பமாயின், அவற்றை நாம் கொல்ல வேண்டுவதும் நேராது. தலையிலும் ஆடையிலும் அழுக்குப்பிடியாதபடி நீராடிக் கழுவித் துப்புரவாய் இருப்பமானால், பேன் உண்டாக மாட்டாது; படுக்கைகளையும் அங்ஙனமே அழுக்கும் ஈரமும் அணுகாமல் வெயிலில் அடுத்தடுத்துக் காய வைத்துத் தூயனவாய் வைத்துக்கொண்டால் மூட்டுப் பூச்சி உண்டாகாது; இல்லத்துள்ள அறைகளில் வெளிச்சமும் காற்றும் மிகுதியாய் உலவும்படி செய்து, இண்டுஇடுக்குகள் வளைகள் இல்லாமல் அடைத்து, உணவுப் பண்டங்களைப் பேழைகளிலும் நிலைப்பேழை களிலும் வைத்து மூடிக் கருத்தாய் நடந்தால் எலிகள் வரமாட்டா. அன்றி, அவ்வாறெல்லாம் கருத்தாய் இருந்தும், ஒரோவொருகால் நம் இல்லங்களுட்புகுந்து நம்மை வருத்தி நம் உயிர்க்குத் தீங்கு செய்யுமாயின், அப்போது அவற்றை நம்மினின்றும் அகற்றுதல் குற்றமாகாது. கடிக்க வரும் பாம்பினையுங் கொல்ல வரும் புலியினையுங் கொன்று நம்மைநாம் பாதுகாத்தல் குற்றமாகாதது போலவும், நமதுணவுக்கு இன்றியமையாத நெற்பயிரைப் பாதுகாத்தற் பொருட்டு அவற்றிடையே வளர்ந்து அவற்றை யழிக்கும் பல்வகைப் பூண்டுகளைக் களைந்தெறிதல் குற்றமாகாதது போலவும், நம்முயிர்க்குத் தீங்கு தரும் எந்தச் சிற்றுயிர்களையும் நம்மினின்றும் அகற்றுதல் சிறிதுங் குற்றமாகா தென்க. என்றாலும், அச் சிற்றுயிர்களை நம்மினின்று அகற்றுமிடத்தும், அவை தம்மை நம்மாற் கூடியவரையிற் கொல்லாமல் அகற்றுதலே நாம் இரக்க நெஞ்சமுடையராய் ஒழுகுதற்குச் சிறந்த நெறியாம் என்பதை அனைவரும் நெஞ்சிற் பதித்தல் வேண்டும். விலகமுடியாதபடி அவற்றை அழித்து அகற்ற