பக்கம்:மறைமலையம் 1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92

❖ மறைமலையம் 1 ❖

நேர்ந்தபழி, அவை தீங்கிலாத பிறவியிற் சேரும்படி இறைவனை வேண்டி மன்னிப்புக்கேட்டு அவற்றை அவ்வாறு செய்தல் வேண்டும். இங்ஙனமாகச் சில சிற்றுயிர்களை விலக்க முடியாதபடி சில நேரங்களில் மக்கள் அழித்துவிட வேண்டியிருப்பதாகிய ஒரு புல்லிய காரணத்தைக் கொண்டு, அவர் ஆடு மாடு கோழி கொக்கு மீன் முதலான தீங்கற்ற உயிர்களையுங் கொன்று அவற்றின் ஊனை உண்ணலாமென்று முன்பின் சிறிதும் இரக்கமில்லாமற் பேசும் வன்னெஞ்சர்களின் கொடுமையை என்னென்பேம்! புலாலுண்பவர் மூட்டுப் பூச்சிக் காரணங் கொண்டு புலாலுண்ணலாம் என்று அழிவழக்குப் பேசுவாராயின், அவர் அம்மூட்டுப்பூச்சி பேன் கொசுகு முதலானவைகளையுந் தின்னாமை என்னையோவென்று கூறிவிடுக்க.

இனி, நம் இந்திய நாட்டவரை அயல்நாட்டவரின் அடிமைத்தனத்தினின்றும் மீட்க முயல்வார் போல் ஆரவாரஞ் செய்வார் சிலர். நம்மனோர்க்குப் போர் புரியும் ஆற்றலும் ஆண்மைத்தன்மையும் உண்டாகல் வேண்டுமாயின், அவர்களெல்லாரும் புலாலுணவு கொள்ள வேண்டுமென எவருங் காணாப் புதியதொரு வழியைக் கண்டுபிடித்துச் சொல்லி வருகின்றார். இவர்கள், கடவுளையும் இல்லையென்று துணிவாய்ச் சொல்லும் பாழ்ங்கொள்கையுடையவர்களாதலால், இவர்கள் தம்மையொத்த மக்களொடு போர்புரிந்து அவர்களைப் பாழ்படுத்தற்குத், தீங்கற்ற உயிர்களையும் பாழ்படுத்த வேண்டும் என்று கூவுகின்றனர்! புலி கரடி ஓநாயைப் போற் பிற உயிர்களைக் கொல்லுதற்கு விழைந்து முன் நிற்கும் இத்தகைய தீவினையாளர் இருக்குங்காறும் உலகில் அமைதியும் நன்மையும் இரா. இக்கொடியவர் தொகை பெருகுமாயின் இந் நிலம் வெறுஞ் சுடு காடாய்விடும்! ஆனால், எல்லா இரக்கமும் எல்லா வல்லமையும் உடைய ஆண்டவன் இக் கொடியவர் தொகையைப் பெருக விடான் என்பது திண்ணம். ஏனென்றாற், கொலைத் தொழிலிலும் புலாலுண்ணுதலிலும் முதன்மை பெற்று நின்ற மேனாட்டவர்களிலேயே அறிவும் ஆராய்ச்சியும் முதிர்ந்த மேன்மக்கள் பல்லாயிரக்கணக்காய் நாளுக்குநாட்பெருகிக், கொலைத் தொழிலையும் அதனால் வரும் ஊன் உண்டலையும் பெருந்தீங்கென உணர்ந்து, அவற்றை மறுத்தல் இன்றியமையாததெனப் பல்லாயிரக்கணக்கான நூல்களாலுந் துண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/125&oldid=1570338" இலிருந்து மீள்விக்கப்பட்டது