❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
விளம்பரங்களாலும் மக்களுக்கு அறிவுபுகட்டி வருகின்றார்கள். எல்லாருங்காண அவர்கள் இடைவிடாது செய்துவரும் ஆராய்ச்சிகளி னுதவிகொண்டு, ஊனுண்பார்க்கு நோய்கள் பல உண்டாகி அவர்தம் உடல் நலத்தை அழித்தலால் அவர்க்கு உடலாற்றல் மனவாற்றல்கள் இல்லையாம்; அவை இல்லையாகவே அவர் ஆண்மைத்தன்மை யுடையவராதலும் இல்லையாம் என்றும், மரக்கறியுணவு கொள்பவர்க்கு உடல்நல மனநலங்கள் தாமாகவே அமைதலால் அவர் இயற்கையாகவே ஆண்மையும் அமைதித்தன்மையும் உடையராய் எத்தகைய அரும்பெரு முயற்சியையுஞ் செய்து முடிக்க வல்லுநராயிருக்கின்றனரென்றும் புலாலுண்டலின் தீமையையும் புலால் மறுத்தலின் நன்மையையும் நன்கு விளக்கிவருகின்றனர். அம் மேன்மக்கள் செய்துபோதரும் ஆராய்ச்சிகளிற் சில முன்னரே எடுத்துக் காட்டியிருக்கின்றேம்.
மேலுங், கொடுமையுஞ் சினமும் இல்லா அமைதியுடையார்க்கே ஆற்றலும் அறிவும் மிகுதிப்பட, அவர்களே தமக்கும் பிறர்க்கும் பயன்பட்டு ஒழுகுவரென்பதும், ஊனுண்டு கொடுமையுஞ் சினமும் அளவுபடாமல் மிகப் பெற்றவர் தமக்கும் பிறர்க்கும் பயனிலராதலுடன், பொது மக்களின் இனிய வாழ்க்கையையுங் குலைத்துவிடு நீரராதலையும் நாடோறும் ஆங்காங்கு நிகழும் நிகழ்ச்சிகளில் வைத்து நன்கறியலாம். அடிபிடி சண்டையில் முனைந்து நிற்பவர்களும், முன்பின்பாராமல் ஆறறிவுடைய மக்களைச் செந்நீர் ஒழுகத் துடிதுடிக்க வெட்டிக்கொல்பவர்களும் யாவரென ஆராய்ந்து பார்க்கச் சிற்றுயிர்க் கொலையைத் தொழிலாகக் கொண்டு ஊன் விற்பவர்களும் புலாலுணவு நிரம்பக் கொள்பவர்களுமே அக்கொடுந் தொழிலைச் செய்பவராயிருக்கின்றனரென உணவாராய்ச்சியிற் றேர்ந்த அறிஞர்கள் கணக்கெடுத்திருக்கின்றார்கள். அவர்போல் அத்துணை நுண்ணிய ஆராய்ச்சி செய்யமாட்டாத நாம், நம்மினுந் தாழ்ந்த விலங்குகளின் இயற்கையில் வைத்து இவ்வுண்மையை எளிதாக அறிந்து கொள்ளலாம். ஊனையே தின்று உயிர் வாழும் புலி கரடி சிங்கம் ஓநாய் முதலான மறவிலங்குகளின் இயற்கையையும், மரத்தின் குழைகளையும் புல்லையும் வைக்கோலையுமே தின்று