❖ மறைமலையம் 1 ❖ |
உயிர்வாழும் ஆடு மாடு எருமை குதிரை கழுதை யானை ஒட்டகம் முதலான அறவிலங்குகளின் இயற்கையையும் பகுத்துப் பார்மின்கள்! இவ்விருவகை விலங்குகளில் எவை வலிமையிற் சிறந்தன? புலி முதலியனவே வலிமை மிக்கனவென்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அஃது உண்மையன்று; பெருஞ்சுமையேற்றிய ஒரு பாரவண்டியில் இரண்டு எருதுகளையும் அங்ஙனமே சுமையேற்றிய மற்றொரு வண்டியில் இரண்டு புலிகளையும் பூட்டி அவற்றை ஓட்டினால், எருதுகளைப்போற் புலிகள் அதனை நீண்டவழி இழுத்துச் செல்லுமா? சிறிதுஞ் செல்லா. மறவிலங்குகட்குக் கூரிய நகங்களும் பற்களும் இருத்தல் பற்றி அவை வலிமையுடையன போற் காணப்படுகின்றனவே யல்லாமல், மாடு குதிரை யானை முதலிய அறவிலங்குகளைப் போல் அவை வலிமையிற் சிறந்தன அல்ல. அதுவேயுமன்றி, மாடு குதிரை முதலானவைகளைப் போற் புலி கரடி முதலாயின மக்கட்குச் சிறிதேனும் பயன்படுவதும் இல்லை. இவ்வாறு இவ்விருவேறு விலங்குகளின் இயற்கைகளையும் உற்று நோக்குதலாலேயே புலாலுண்பவர் தமக்கும் பிறர்க்கும் பயன்படத்தக்க, ஆற்றலும் அறிவும் இலராதல் எளிதில் விளங்கும். இத் துணைதானும் ஆய்ந்து பாராமற் பேசுவார்தம் வெற்றுரையினை நம்பிப், புலாலுண்பார்க்கே, அறிவும் ஆண்மையும் உண்டாமென எண்ணிவிடாதீர்கள்!
இனி, இஞ்ஞான்றுள்ள மக்கட்பகுப்பினர் சிலர்க்குள்ள ஆண்மைத்தன்மையின் காரணம் யாது? என்று ஆராய்ந்து பார்ப்பீர்களாயின், அஃது அவர் ஓவாது செய்து போதரும் அறிவாராய்ச்சியே யாவதல்லால் அவர்க்குள்ள உடல் வலிமை யன்றென்பதூஉந் தெளிய உணர்வீர்கள். முன்னாளில் அரசர் இருவர்க்குட் போர் மூண்டால், அவ்விருவர்க்குரிய படை மக்களும் ஒருவரோடொருவர் நெருங்கிப் போர் புரிந்து ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்து, இருதிறத்தாரும் பருந்துன்பம் எய்துவர். மற்று, இந்நாளிலோ பத்துக்கல் இருபதுகல் விலகி நின்று இருபடைகளும் போர்புரியத்தக்க பலதிறக் கருவிகள் அறிஞர்களாற் புதிது கண்டுபிடித்து அமைக்கப் பட்டிருக்கின்றன.பத்துக்கல் இருபது கற்களுக்கு அப்பால் நிற்கும் படைகளையுஞ் சுட்டுச் சாய்க்கும் பீரங்கிகளும், ஐம்பதுகல்