பக்கம்:மறைமலையம் 1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
95

அறுபது கற்களுக்கு அப்பால் நிற்கும் படைகளையும் அரைமணி நேரத்திற் பறந்துசென்று மாய்க்கும் வானக்கப்பல்களும், நீர் மேல் நிற்குஞ் சண்டைக்கப்பல்களை எவரும் அறியாமல் நீருள் மூழ்கிச் சென்று தகர்க்கும் நீர்மூழ்கிக் கப்பல்களும், நம் சொல்லளவில் அடங்கா என்னும் எத்தனையோ அரும்பெருங் கருவிகளும் இக்காலத்திற் புதியபுதியவாய்க் கண்டுபிடிக்கப்பட்டு நிலவுகின்றனவே! அவையெல்லாம் உடல் வலிமையால் ஆக்கப்பட்டனவா? அன்றி அறிவு வலிமையால் ஆக்கப்பட்டனவா? எல்லாம் அறிவு வலிமையால் அல்லவோ ஆக்கப்பட்டனவென்று சிறு மகாருஞ் சொல்வர்! இஞ்ஞான்று புதுமையினும் புதுமையாய்க் கண்டுபிடிக்கப்பட்டன வெல்லாம் ஊன் வலிமையுடையவர்களால் வந்தன அல்ல; மற்றுப் பழமும் பாலும் வித்துக்களுமாகிய சிற்றுணா உண்டு, இரவில் இரண்டு மணிநேரங்கூட உறங்காத அறிஞர் பெருமக்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டன வென்பது, அவர்தம் வரலாறுகளை உணர்வார் நன்கறிவர். மின்சார ஆற்றலின் வகைமைகளை உலகமெல்லாம் வியக்கும்படி புதிய புதியவாய்க் கண்டுபிடித்து எங்கும் எடிசன் என்னும் அறிஞர்பெருமான் வரலாறே இதற்குச் சான்றாம். ஆகவே, அறிவுவலிமை படைத்தார்க்கே எல்லா வலிமையும் உண்டாகுமல்லாமல், வேறு ஊன் பொதிதாங்கினார்க்கு ஏதொரு வலிமையும் உண்டாகாதென்றுணர்ந்து கொள்க. இதுபற்றியே ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்,

“அறிவுடையார் எல்லாம் உடையார்
அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்”

(குறள் 430)


என்றதூஉம், பழைய சங்ககாலத்துப் புலவர் ஒருவர்,

“ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன் இனிதே”

என்றதூஉ மென்க.

இனிக், கண்ணப்பநாயனார் தாமுந் தின்று இறைவனுக்கும் படைத்தவிலங்கின் இறைச்சியை இறைவன் ஏற்றுக் கொண்டமை, அவர்தம் வரலாறு கூறும் நூல்களாலும் பாட்டுக்களாலும் நன்கறியக்கிடத்தலின், ஊன் உண்பது இறைவன் கருத்துக்கு மாறாகாதென்று கூறுவாரும் உளர். இவர் கூற்றுப் பொருத்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/128&oldid=1597327" இலிருந்து மீள்விக்கப்பட்டது