பக்கம்:மறைமலையம் 1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96

❖ மறைமலையம் 1 ❖

முடைத் தகாமையினைச் சிறிது விளக்குவாம்; கண்ணப்ப நாயனாரோ வேட்டுவ குலத்திற் பிறந்து, அக் குலத்திற்குரிய வேட்டையாடுந் தொழிலிலும், அத்தொழிலால் வரும் ஊனை உணவாகக் கொள்ளும் வாழ்க்கையிலும் பழகினவர்; வேட்ட மாடுந் தொழில் விலங்குகளுக்குப் பெருந்துன்பந் தருவதென்பது, ஆகவே விலங்குகளைக் கொன்று பெற்ற இறைச்சியை இறைவனுக்குப் படைத்தல் குற்றமென்பதுஞ் சிறிதும் அறியாதவர். இத்தன்மையராகிய அவர், மேற்பிறவிகளிற் செய்த பெருந்தவத்தின் முடிந்த பயனாய், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான சிவபிரானிடத்தில் முதிர்ந்த அன்பு கொள்ளப் பெற்றார். ஒருவர்பால் அளவுகடந்த அன்பு கொள்ளப்பெற்ற பிறரொருவர், தமக்குரிய சிறந்த பொருள்களையும் தாம் நுகரும் சிறந்த உணவுப்பண்டங்களையும் தமக்கென வரைந்து வைத்துக் கொள்ளாது, தாம் அன்பு வைத்தவர்க்கே அவை தம்மை யெல்லாங் கொடுத்து, அவர் நுகர்ந்து மிஞ்சிய மிச்சத்தையே அமிழ்தினுஞ் சிறந்ததாகக் கருதி மகிழ்ந்து தாம் உட்கொள்ளா நிற்பர். இஃது உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் வைத்துச் செவ்வனே அறியப்படுவதோர் அரும்பேருண்மையாம். இவ்வுண்மைக்கு இசையவே, கண்ணப்ப நாயனார் தமக்குச் சிறந்த உணவாகத் தாம் கருதிய முள்ளம்பன்றி மான் மரை கடம்பை முதலான விலங்குகளின் இறைச்சியை முதலில் இறைவனுக்குப் படைத்து, அதன்பின், மிகுந்ததைத் தாம் அயின்று, இறைவனது அருட்குறியினை அகலாது உடனிருந்து அன்பினால் அகங்கரைந்து நீராய் உருகினார். எம்பால் அன்பு மீதூரப் பெற்றார் ஒருவர், எமக்குள்ள அறிவு இல்லாராய், யாம் விரும்புவது இன்னதென்றும் உணராராய்த், தாம் சிறந்ததாகக் கைக்கொண்ட ஒரு பண்டம் எவ்வளவு எம்மால் அருவருக்கப்படுவதாயினும் அதனைத் தாம் அறியாமே, எம்பால் அதனை நெக்குருகும் நெஞ்சத்தோடும் உய்த்து, அதனை ஏற்றருள்க என எம்மைக் குழைந்து குழைந்துருகி வேண்டிடுவராயின்; அத்துணை அன்புடைய அவரது வேண்டுகோளை யாம் ஏலாதிருத்தல் இயலுமோ! இயலாதன்றே. சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடைய எம் போன்றார்க்கே, பேரன்புடையார் செய்யும் அன்பின் வரிசைகளை ஏலாமல் மறுத்தல் இயலாதென்றால், அன்பின் உருவாய்த் திகழும் ஆண்டவன் தன்னடியவர் தன்பால் வைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/129&oldid=1570421" இலிருந்து மீள்விக்கப்பட்டது