❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
அன்பின் பெருக்காற் செய்யும் அன்பின் அடையாளச் - செயல்களை அவை அன்பில்லாத ஏனை உலகத்தவர்க்கு எத்துணை இழிந்தனவாக, எத்துணை இசையாதனவாகக் காணப்படினும், ஏலாதொழிவனோ? தன்பால் அன்பு மிக்க தன் இனிய மகவு தன் கையிற் கிடைத்த ஓர் அருவருப்பான பண்டத்தைத் தன் வாயில் வைத்துண்ணுமாறு வற்புறுத்துகையில், தாயானவர் எவ்வளவு மகிழ்வோடு அதனை வாங்கி, அஃது இழிந்ததேயாயினும் உண்ணத் தக்கதாயிருந்தால் உண்டு விடுகின்றாள்! உண்ணத் தகாததாயிருந்தால் அதனை உண்பது போற் காட்டி அதனை அப்புறம் மறைத்து அம் மகவினை மகிழ்வித்துத் தானும் மகிழ்கின்றாள். இங்ஙனமே, அன்பின் பெருக்காற் கண்ணப்ப நாயனார் படைத்த ஊன் உணா, இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுந் தகுதியுடைத்தன்றேனும், அவரது பேரன்பின் பெற்றி நோக்கி, அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுபோல் தோன்றலாயிற்று. ஆகவே, அன்பினுருவான ஐயன் அடியார்க்கு எளியனாந் தன்மையனாதலால், அவன் அவர் பொருட்டுச் செய்பவைகளை யெல்லாம் அவன்றன் திருவுளத்திற்கு ஒப்பனவாகக் கூறுதல் அடாதென்றுணர்க. தாய்க்கு ஆகாதவைகளைக் குழந்தை ஆவனவாகக் கருதி அன்பினாற் செய்யுமாயின், அவை தம்மைத் தாயானவள் தனக்கும் ஆமெனக் கொண்டனளெனக் கூறுதல் ஒக்குமோ, உரைமின்கள்! அன்பர்களே! அதுபோலவே, கடவுளுந் தமது திருவுளத்துக்கு இசையாதவைகளை ஆமெனக் கருதித் தம் அன்பர்கள் கரைகடந்த அன்பின் பெருக்காற் செய்குவராயின், அவைதம்மை ஆண்டவன் அருண்மிகுதியால் ஏற்பதுபோற் காட்டி அவர்தம்மை மகிழ்விப்பன் என்றுணர்தல் வேண்டும்.
அஃதொக்குமாயினும், அன்பின் முதிர்ச்சியாற் கண்ணப்பர் படைத்த புலாலை இறைவன் உண்மையில் ஏற்றனன் அல்லன் என்பதற்கும், புலாலுணவு கொண்டமையாற் கண்ணப்பர்க்கு உண்டான தீவினையைக் கழித்தே இறைவன் அவரைத் தன் திருவடிக்கண் ஏற்றருளினன் என்பதற்கும் அடையாளம் உளதோவெனிற், காட்டுதும்: பிற உயிர்க்குக் கடுந்துன்பத்தைத் தருங் கொலைத் தொழிலைச் சிறு பிள்ளையாயிருந்த காலந்தொட்டே பழகி வந்தவர்க்குத், தாம் செய்யும் அத்தொழிலால் அவ்வுயிர்கள் எவ்வளவு துன்பத்தை அடைகின்றன என்னும்