❖ மறைமலையம் 1 ❖ |
உணர்ச்சி சிறிதும் உண்டாகாது. இங்ஙனத் தாம் சிறிதும் உணராதே அக்கொலைத் தொழிலை வழக்கமாய்ச் செய்து வருகுவரேனும், அக்கொடுந் தொழிலால் வருந்தீவினை அவரை விட்டகலாது; பிறவிகடோறும் அவரைத் தொடர்ந்து சென்று பலவாற்றானும் அவரைத் துன்புறுத்தாநிற்கும். இத்தகையோர் இறைவன் திருவடிப் பேரின்பத்தைப் பெறுதற்குரிய பேரன்பு மிகப் பெற்றாரானாலும், அவர்தாம் செய்து போந்த கொலைத் தொழிலாற் பிற உயிருக்குண்டான கொடுந்துன்பத்தை உணர்ந்து, தாமும் அவ்வுயிர்போற் கொடுந்துன்பம் உழந்து துன்பத்திற்குத் துன்பம் ஈடுகொடுத்தால் அல்லாமல், அவர் தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்குந் தீவினையை யொழித்துச் சிவத்தின் அருளைப் பெறமாட்டார். ஆதலாற், கண்ணப்ப நாயனார் கடவுளிடத்து அளவுபடாப் பேரன்பு கொண்டாராயினும், அவர் அதுகாறுஞ் செய்து போந்த கொலைத் தொழிலாற் பிறவுயிர்க்குண் பெருந்துன்பத்தின் அளவையுணர்ந்து, அத் துன்பத்திற்குத் தாமும் பெருந்துன்பம் எய்தி ஈடுசெலுத்த வேண்டுவது இன்றியமையாததாயிற்று; அவ்வாறு செய்தாற்றான் அவரைக் கவிந்த பெருந்தீவினை அகலும்; அத்தீவினை அகன்றாற்றான் அவர் சிவத்தின் அருளைத் தலைக் கூடுதல் வாய்க்கும். ஆனது பற்றியே, எல்லாம் வல்ல இறைவன் கண்ணப்பரின் பேரன்பை உலகத்தார்க்குப் புலப்படுத்தல் வேண்டியும் அவர் அதுகாறுஞ் செய்துவந்த கொலைத் தொழிலால் விளைந்த தீவினையைக் கழித்தல் வேண்டியும் தன் திருவுருவத்தின் வலது கண்ணில் நோய் மிகுந்து நீர் வடிவதுபோற் காட்டினான். அதனைக் கண்ட கண்ணப்பர் ‘எம்பெருமான் றன் கண்ணுக்கு வந்த இந்நோயை எங்ஙனந் தீர்ப்பேன்!’ என்று எண்ணியெண்ணி ஏங்கி ஆற்றாராயினார். முடிவாக, அவரிருந்த வேட்டுவவாழ்க்கையில், உணவாக இடுதற்கும் நோய் தீர்த்தற்கும் உரித்தாவது இன்னது தான் என்பது புலனாயிற்று; தாமுந் தம்மையொத்த மற்ற வேட்டுவர் உடம்பும் ஊனாற் சமைந்தவையாதலால், ஊனுக்கு ஊனையிடுதலே பசி தீர்த்தற்கும் நோய் தீர்த்தற்கும் இசைந்த முறையாகும் என்று என்று கண்டறிந்தார். அவரது வேட்டுவ வாழ்க்கையின் அளவுக்கு அவரது அறிவு கண்ட முறை அத்துணையேதான். அவ்வறிவு தோன்றியவுடன் அவரடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இல்லை. ‘எம்பெருமானுக்கு வந்த