பக்கம்:மறைமலையம் 1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
99

இக் கண்ணோயைத் தீர்க்க என் கண்களில் ஒன்றைப் பிடுங்கி, நோய்கண்ட கண்ணில் அப்பக் கடவேன்’ என்று மனந்துணிந்து எழுந்து, ஆண்டவன் திருவுருவத்தின் அருகே சென்று, தமது ஒரு கூரிய அம்பின் முனையால் தமது ஒரு கண்ணை அடியோடு கல்லியெடுக்கலானார். பாருங்கள், அன்பர்களே! இந்நேரத்தில் அவர் தம் உடம்பும் உயிரும் எவ்வளவு துன்புற்றுத் துடிதுடித்திருக்கும்! பிறவுயிரை அவற்றின் ஊனின் பொருட்டுக் கூர்ங் கணையாற் குத்திக்கொன்ற காலங்களில், அவை எவ்வளவு துன்புற்றுத் துடிதுடித்திருக்கும்! அவ்வளவு துன்பத்திற்கும் இப்போது கண்ணப்பர் தமது கண்ணைக் குத்திக் கல்லி எடுக்கின்றகாலையில் தாமும் துன்புற்று துடிதுடித்து ஈடு கொடுத்தவராயினார்! ஐயறிவுடைய சிற்றுயிர்களின் துன்ப உணர்ச்சியானது, ஆறறிவுடைய மக்களின் துன்ப உணர்ச்சியினும் பலபடி குறைந்தது. இவ்வேறுபாடு வெட்டுண்ட ஓர் ஆட்டின் உடம்புக்குள்ள துடிதுடிப்பையும் அங்ஙனமே வெட்டுண்ட ஓர் ஆண்மகனுடம்புக்குள்ள ஆற்றொணாத் துடிதுடிப்பையும் கண்ட ஒருவர்க்கே தெரியும்; மேலுஞ், சிற்றுயிர்களாவது பிறர் கையாற் கொல்லப்படுகின்றன; இங்குக் கண்ணப்பரோ தமது கையாற் றம் கண்ணைக் கிண்டி எடுக்கின்றார்! இஃது எவ்வளவு கொடுந்துன்பம்! அதுவேயுமன்றி, ஒருவன் தன் கழுத்தைத் தானாகவே விரைந்து வெட்டிக் கொள்வானாயின், அவன்றன் உயிரும் உணர்வும் விரைவில் அவனது உடம்பைவிட்டு அகலும்! அதனால் ‘துன்ப உணர்ச்சி நெடுக இராது;’ ஆனால், இங்குக் கண்ணப்பரோ தமது உடம்பின்கண் தம் உயிரும் உணர்வும் நிலைபெற்றிருக்கும் நிலையில் தமது கண்ணைத் தோண்டி யெடுக்கின்றார்; ஆ! ஈது எவ்வளவு தொடர்பான துன்பத்தைத் தருஞ்செயல்! இவ்வளவு கொடுந் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு, அவர் கடவுள்பாற் காட்டிய பேரன்பின் திறம் புல்லிய எம் ஒரு நாவால் விளம்பலாந் தன்மைத்தோ! இவ்வளவிலாவது சிவபிரான் அவரை விட்டனரா! இல்லை! இல்லை! கண்ணப்பர் தமது ஒரு கண்ணைப் பிடுங்கி அப்பியவுடன், சிவபிரான் தமது ஒரு கண்ணிலிருந்து நோய் தீர்ந்து விட்ட அடையாளங் காட்டினான். அது கண்டு கண்ணப்பர் மெய்ம்மறந்த களிப்புடையராய் ஆடினார்; பாடினார்! ஆனால், மற்றைநாள் இறைவன்றன் மற்றொரு கண்ணிலும் நோய்மிகுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/132&oldid=1597329" இலிருந்து மீள்விக்கப்பட்டது