❖ மறைமலையம் 1 ❖ |
அதிலிருந்தும் நீர்வடியலாயிற்று. இப்போது கண்ணப்பர்க்கு அது தீர்க்கும் மருந்து தம்மிடம் இருப்பது நன்கு தெரியுமாதலால், அதுபற்றி மிகுதியாய்க் கவலை கொண்டிலர். உடனே தமது மற்றொரு கண்ணையுந் தோண்டி எடுக்க முனைந்தனர். ஆனால், எஞ்சியுள்ள இவ்வொரு கண்ணையுங் கல்லி யெடுத்துவிட்டால், இறைவனுருவத்தில் உள்ள கண்ணில் அதை அப்புவதற்குத் தமக்குப் பார்வை தெரியாதே என்று கலங்கினார். அதன்பின், தமது காற்பெருவிரலை இறைவனுருவில் நோய்கண்டகண்ணின் அருகே அடையாளமாக வைத்துக் கொண்டால் தாம் பிடுங்கும் மற்றக் கண்ணையும் அதில் அப்பிவிடலாமென்று வழி தெரிந்தார். தெரிந்ததும் அகங்களித்துத் தமது இடது காற் பெருவிரலை அங்ஙனமே அடையாளமாக வைத்துக்கொண்டு, தமது மற்றைக் கண்ணையுங் கல்லியெடுத்தற்கு அம்பின் முனையை ஊன்றினார். அவ்வளவில் அவர்தாஞ்செய்த காலைத் தொழிலால் விளைந்த தீவினையும் ஒழிந்தது; அவர் முற்றுந் தூயரானார். கரைகடந்த அன்பினால் உளந் தூயராய கண்ணப்பரை மேலுந் துன்புறுத்த அருட்பெருங் கடலான ஆண்டவன் திருவுள்ளம் இசையவில்லை; உடனே,
“நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!
என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!”
என மும்முறை கூறிச் சிவபெருமான் தனது திருக்கையினாலே அவரது கையைப் பிடித்துத் தடைசெய்து அவரைத் தனது திருவருட் பேரின்பத்திற் கலப்பித்துக் கொண்டனன். பார்மின்கள் அன்பர்களே!எல்லா உயிர்க்குந்துணைவனாகிய இறைவன் சிறிதும் நடுநிலை தவறானாய், அன்பிற் றலைநின்ற கண்ணப்ப நாயனாரையும், அவர் சிற்றுயிர்களைக் கொன்ற தீவினைக்கு அவர் தாமே தமது கண்ணைக் கல்லியெடுக்குமாறு செய்தும், அவ்வாற்றால் உயிர்க்கொலையின் துன்பம் இத்துணைக் கொடிதென்றுணர்ந்து அதற்கு அவர் தாமுந் துன்புற்று ஈடு கொடுக்குமாறு தூண்டியும் ஒறுத்து, அதன் பின்னரே அவரைத் தன் திருவடிப் பேரின்ப வாழ்க்கையில் அமர்வித்தன னென்றாற், கண்ணப்பரின் கரையிகந்த அன்பில் ஓர் அணுத்துணை தானும் இல்லாத மற்ற மக்கள் பிற உயிர்களைக் கொன்றெடுக்கும் ஊனைத்தின்று பெருக்குந் தீவினைக்காக அவரைத் துன்புறுத்தாது