❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
விடுவனோ! உயிர்க்கொலை செய்வாரெல்லாம் ஊன் தின்பாரெல்லாந் தாஞ் செய்யுந் தீவினைக்குப் பிறவிகடோறும் அளவிறந்த துன்பத்தை யடைந்து ஈடுகொடுத்தே தீரல்வேண்டும். இவ்வுண்மை பட்டினத்தடிகளாலும்,
“கொன்றனை அனைத்தும் அனைத்தும்நினைக் கொன்றன தின்றனை அனைத்தும் அனைத்தும் நினைத் தின்றன”
என்று அறிவுறுத்தப்பட்டமை காண்க. இவ்வுண்மை யுணராதார் கொன்றதனால் உண்டாகுந் தீவினை, கொன்ற உயிரின் ஊனைத் தின்பதனாற் போய்விடும் என்று செருக்கி யுரைக்கின்றார்கள்! இஃது அறியாமையேயாகும்; ஏனென்றாற், கொன்ற உயிரின் ஊனைத் தின்பதனாற் கொன்ற தீவினை எவ்வாறு நீங்கும்? ஒருவனைக் கொன்றவனை ஏன் தூக்கிலிட்டுக் கொல்லுகிறார்கள்? கொலைத் துன்பத்திற்குக் கொலைத் துன்பமே ஈடாகும் என்பது பற்றியன்றோ? ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்று மகிழ்பவன், தான் செய்த கொலைத் துன்பத்திற்கு ஈடாகத் தானுங் கொலைத்துன்பம் அடைந்தான் ஆவனோ! ஆகவே, சிற்றுயிர்களை ஊனின் பொருட்டுக் கொல்வாரெல்லாம், தாம் மறுபிறவியிற் சிற்றுயிர்களாய்ப் பிறக்கத், தாம் கொலைசெய்த அச் சிற்றுயிர்கள் மக்களாய்ப் பிறந்து அவை தம்மைக் கொன்று தின்றாற்றான் அப் பாவம் நீங்கும் என்பதே, “கொன்றாற் பாவம் தின்றாற்போம்” என்னும் பழமொழியின் மெய்ப்பொருளாகுமென்று அறிமின்கள்! எனவே, இறைவன் அன்பின் மிக்க தன் அடியவர் உயிர்க்கொலை செய்திருந்தனராயின், அவரை அத் தீவினைக்குத் தக்கபடி துன்ப ஈடு கொடுக்கச் செய்தே பின்னர்த் தன் திருவடிக்கண் ஏற்றருள்வ னென்பதைக் கடைப்பிடித்துணர்மின்கள்! ஆகவே, கண்ணப்பர் விலங்குகளைக் கொன்று ஊனைத்தின்ற குற்றத்தை இறைவன் ஏற்றனன் அல்ல னென்பதூஉம், அக் குற்றந் தீரும் பொருட்டாகவே அவர்தமது கண்ணைத் தாமே இடந்து அப்புமாறு செய்தன னென்பதூஉம் அறிந்து கொள்ளல்வேண்டும்.
அஃதொக்கும், இறைவனை நேரே கண்டு, மூன்றாண்டுச் சிறுகுழவியா யிருந்த ஞான்றே எல்லாம் ஓதாதுணர்ந்து, அருளொழுக்கத்தையே வலியுறுத்துஞ் சைவசமயத்தை