❖ மறைமலையம் 1 ❖ |
நிலைநாட்டினவரான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தாம் அருளிச்செய்த தில்லைப்பதிகத்திற் “பறப்பைப்படுத் தெங்கும் பசுவேட்டு எரியோம் புஞ், சிறப்பர் வாழ்வதில்லை” என்னுஞ் செய்யுளில் உயிர்க்கொலை வேள்வி செய்த தில்லை வாழ் அந்தணரைச் ‘சிறப்பர்’ என்று உயர்த்துப் பாடியதென்னை? அதனால், உயிர்க் கொலை செய்தல் குற்றம் அன்றென்பது அவர்க்கும் உடன்பாடுபோலு மெனின்; அற்றன்று; அஞ்ஞான்றிருந்த தில்லையந்தணர்கள் சிவபிரான் மாட்டு எல்லையற்ற அன்புடையவர்கள். வடக்கிருந்து வந்த ஆரியர் செய்த வேள்விகள் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானை நோக்கிச் செய்யப்படாமல், இந்திரன் வருணன் மித்திரன் முதலான பிறந்திறக்குஞ் சிறு தெய்வங்களை நோக்கியே செய்யப்பட்டன. அதுகண்ட தில்லையந்தணர்கள், அவ்வாரியப் பார்ப்பனர்க்கு நல்லறிவு கொளுத்தும் பொருட்டு, அவர் செய்து போந்த வேள்விகளுட் சிறந்தன சிலவற்றைத் தாமுந் தழுவி, அவை தம்மைச் சிவபிரான், ஒருவர் மேலனவாகவே வைத்து வேட்கலாயினர்; அங்ஙனம் வேட்குமிடத்தும், ஆரியரைப் போல் ஆயிரக்கணக்கான ஆடு மாடு குதிரை எருமை முதலான உயிர்களைக் கொல்லாமல், ஏனைமக்களெல்லாம் நாடோறும் உணவுக்காகப் பல்லாயிரக்கணக்காய்க் கொல்லும் ஒருசில ஆடுகளையே மந்திரங்களால் உணர்விழக்கச் செய்து கொன்று வேட்பாராயினர். மந்திரங்களால் உணர்விழந்த அவ்வாடுகளுக்குத் துன்ப உணர்ச்சி சிறிதுமே இல்லையாகும். இஞ்ஞான்றும் உடம்பின் உள்நோய் உடையார் சிலரை அறுத்து நோய் தீர்க்கும் மருத்துவர், மயக்க மருந்து ஒன்றால், அந்நோயாளிகளை உணர்விழக்கச் செய்து, அவர்க்குச் சிறிதுமே துன்பம் இல்லாமல் அவர்தம் உடம்பை அறுத்து மருத்துவஞ் செய்தல் போலவும், யோக நித்திரை என்னும் அறிதுயிலை வருவிக்கப் பழகினவர்கள் அத்துயிலை வருவிக்கும் முறையால் அங்ஙனமே நோயாளி களையும் பிறரையும் உணர்விழக்கச் செய்து அவர்தம் உடம்புகளை அவர்க்குச் சிறிதுந் துன்பம் உண்டாகாமல் அறுத்து நோய் தீர்த்தல் போலவும், பண்டைக்காலத்து அந்தணர்கள் தாம் வேட்பதற்குக் கொணர்வித்த விலங்குகளை மந்திரங்களால் உணர்விழக்குமாறு செய்தே அதன்பின் அவற்றை வெட்டி வேட்டனர். இவ்வாறு விலங்குகளுக்குச் சிறிதுந் துன்பம்