❖ மறைமலையம் 1 ❖ |
பெருமான் அவர்தம்மை அங்ஙனஞ் சிறப்பித்துப் பாடினார் என்பது. அற்றன்று, ஆரியர் செய்து போந்த கொலைமலி வேள்வியை நிறுத்த விரும்பிய தில்லையந்தணர், தாம் அவை போன்ற வேள்வி புரியாதிருத்தலே நன்றாகுமன்றித், தாமும் அவர்போற் செய்தல் நன்றாமாறு யாங்ஙனமெனின்; யானை பிடிப்பவன் யானையைக் கொண்டே அதனைப் பிடிப்பிப்பன்; அதுபோல், ஆரியப் பார்ப்பனரைச் சைவவொழுக்கத்திற்குத் திருப்பல் வேண்டிய தமிழந்தணரும் அவர்போற்றாமுஞ் சிறிது சிறிது நடத்திக் காட்டினாலன்றி, அவர் தம்மைத் தம்வழிப்படுத்தல் ஆகாது; அது கண்டே, அவர் தம்மை அவரோடு இனப்படுத்திக்கொண்டு அவ்வாறு செய்யலாயினர். இங்ஙனம் செய்யாது விட்டால், ஆரியப் பார்ப்பனர் தமிழந்தணரைத் தமக்கு முற்றும் புறம்பானவராகக் கருதி, அவர் கூறுஞ் கூறுஞ் சைவ அருளொழுக்கத்தைக் கைப்பற்றாது அகன்று ஒழுகுவர். ஆரியப் பார்ப்பனர்தம் வேள்வி முறைகளை முற்றும் மறுத்தமையினாலல்லவோ பௌத்த சமண சமயங்கள் புறச்சமயங்களென அவர் தம்மால் அறவே விலக்கப்பட்டு, அவற்றின் அரிய அருளொழுக்கக் கோட்பாடுகளும் அவர் தம்மாற் றினையளவுந் தழுவப்படாதொழிந்தன; ஒழியவே, அப்பௌத்த சமண சமயங்கள் இந்நாட்டில் நிலைக்களன் காணாதும் மறைந்து போயின. ஆகவே, இந்நுட்பம் உணர்ந்த பண்டைத் தமிழ் நாட்டுச் சான்றோராகிய தமிழந்தணர்கள், ஆரியப் பார்ப்பனரைத் தம் வழிப்படுத்துதற் பொருட்டாகவே, அவர்தம் வேள்வி முறைகளைத் தாமுந் தழுவுவது போற் சிறிது சிறிது செய்து காட்டிப், பின் காலஞ் செல்லச் செல்லப் படிப்படியே எவ்வகை வேள்வியுந் தமிழ்நாட்டில் வேட்கப்படாதபடி அவைதம்மை அறவே நிறுத்திவிட்டனர். வேள்வி யாற்றுதலை நிறுத்தியபின், ஆரியர் தம்மை விட்டு விலகி மீண்டுஞ் சிறுதெய்வ வணக்கத்தைக் கைப்பற்றுவரெனக் கருதியே, அவர் கொணர்ந்த ஆரியச் சிறு தெய்வப்பாட்டுகளாகிய இருக்கு, யசுர், சாமம், அதர்வம் முதலிய வேதங்களைத் தம்முடைய சிவபிரான் திருக்கோயில்களில் ஓதுதற்கும், ஆரிய மொழிச் சொற்களாற் சிவபிரானை வழிபடுதற்கும், ஆரியச் சிறு தெய்வங்களான இந்திரன் வருணன் முதலியவற்றின் வடிவங்களைச் சிவபிரான் கோயில் மூலைகளில் வைத்து வணங்குதற்கும்,