பக்கம்:மறைமலையம் 1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
105

தமிழ்நாட்டில் நிகழ்ந்த இறைவன் திருவிளையாடல்களையும் அடியார் வரலாறுகளையும் எல்லாம் ஆரியரின் வடமொழியில் எழுதி வைத்தற்கும், சரியை கிரியை யோகம் ஞானம் என்னுங் கடவுள் வழிபாட்டு முறைகளையெல்லாம் ‘ஆகமம்’ எனப் பெயர் தந்து வடமொழியில் எழுதிவைத்தற்கும் ஒருப்பட்டு நின்று, ஆரியர் செய்து போந்த சிறுதெய்வ வணக்கத்தை அடியோடு நிறுத்தி, அவரெல்லாஞ் சிவபிரானாகிய முழுமுதற் கடவுள் ஒன்றையே வழிபட்டுக் கொலை குடிபுலாலுணவு நீக்கி முற்றுஞ் சைவவொழுக்கத்தினராகும்படி செய்து, தாம் கொண்ட மிகவுயர்ந்த நல்லெண்ணத்தை நிறைவேற்றிவிட்டனர். துவக்கத்தில் மிகவும் பரபரப்போடு விரிந்து பரவிய பௌத்த சமண சமயங்களின் முனிவர்களாலுந் திருத்த முடியாமல், தம்மைத் திருத்த முனைந்த அப்பௌத்த சமண சமயங்களையும் இந்நாட்டைவிட்டு ஓட்டிய ஆரியரைத், தமிழந்தணர்கள் முற்றுந் திருத்தி அவர் சைவ அருளொழுக்கத்தைக் கைப்பற்றும்படி செய்தனரென்றால், நம் தமிழந்தணர்தம் அறிவின் நுட்பத்தையும் அருளாற்றலையும் எங்ஙனம் எடுத்தியம்பவல்லேம்! ஆதலால், அன்பர்களே! தில்லை வாழந்தணர்கள் அஞ்ஞான்று வேட்ட வேள்விகள் ஆரியரைத் திருத்துதற்பொருட்டுச் சிவபிரானை நோக்கிச் செய்யப்பட்ட கருத்துணர்ந்தே, திருஞானசம்பந்தப் பெருமான் “பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்பலம்” என்று அவர்தம்மை உயர்த்துப் பாடினார். பல்லாயிர உயிர்களைக் காக்கும் பொருட்டு சில உயிர்களைக் கொல்லுதல் குற்றம் ஆகாமை அரசியல் முறைக்கும் ஒத்ததே யாகலின், ஆரியர்வேட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்க்கொலையை நிறுத்துதற் கருவியாய்த் தில்லை வாழந்தணர் எல்லாம் வல்ல இறைவனை நோக்கிச் சில்லுயிர் வேட்டுச் செய்த வேள்விகளுங் குற்றமாகா ஆயின. ஆரியர் சென்ற வழியே சிறிது தாமுஞ் சென்று தமிழந்தணர்கள் அவரைத் திருத்தினமையினாலேதான், தமிழ்நாட்டிலுள்ள, ஆரியப் பார்ப்பனர் எல்லாருங் கொலைபுலை மறுத்த சைவவொழுக்கத் தினராய் இன்று காறும் வாழ்ந்து வருகின்றனர். மற்றுப் பௌத்தமும் சமணமும் மிகப் பரவியிருந்த வடநாட்டிலுள்ள ஆரியப் பார்ப்பனரோ சைவவொழுக்கஞ் சிறிதும் இல்லாராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/138&oldid=1597332" இலிருந்து மீள்விக்கப்பட்டது