பக்கம்:மறைமலையம் 1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106

❖ மறைமலையம் 1 ❖

இன்றுகாறும் புலாலுணவு கொண்டு காலங் கழிப்பவராய்ச் சிவபிரானை வழிபடாதவராய் இருக்கின்றனர்; இஃது எதனாலென்று ஆராய்ந்து பார்ப்பின், பௌத்த சமண மதங்கள் ஆரியரொடு ஒருசிறிதும் ஒவ்வாது அவர்க்கு முற்றும் மாறாய் நின்றதனாலேயே, ஆரியர் அவரை எட்டுணையும் பின்பற்றாது தாம் செய்து போந்த உயிர்க்கொலைச் செயலிலே நிலைநின்றன ரென்பது புலனாகும். இவ்வாற்றால் ஆரியரைத் திருத்திய தமிழ்ச் சான்றோரின் பேரறிவும், அவரைத் திருத்தமாட்டாது தாமும் மறைந்தொழிந்த பௌத்த சமண சமயத்தினர்தஞ் சிற்றறிவும் எவர்க்கும் நன்கு விளங்கும். எனவே, திருஞானசம்பந்தர் தில்லைவாழந்தணர் தம் ஒழுகலாற்றை உயர்த்துப் பேசியது வாய்வதேயாமென்க.

அவ்வாறு அவர், அவர்தம் ஒழுக்கத்தை உயர்த்துரைப்பினும், தாம் தம் வாழ்நாள் எல்லையில் எங்கும் வேள்வி செய்ததுமில்லை; அது செய்யுமாறு பிறரை ஏவியதுமில்லை. தம் தந்தையார் வேள்வி செய்ய விரும்பி அதன் செலவுக்காகப் பொருள் வேண்டிய காலையில், அவர் கேட்ட பொருளைத் தந்து அவர்கேட்ட அவரை விடுத்தனரேயல்லாமல், தந்தையார் வேட்ட வேள்விக் களத்திற்குத் தாம் சென்றிலர். இதனால், வேள்வி வேட்டலில் திருஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிறிதும் உடம்பாடில்லை யென்பது தெற்றெனப் புலனாதல் காண்க.

இனிக், கோழி நீர்க்கோழி தாரா (வாத்து) முதலியவற்றின் முட்டைக்கும், புற்பூண்டுகட்கும் அவற்றின் பயனான காய் கனி வித்துக் கிழங்குகட்கும் வேறுபாடு இல்லாமையின், முட்டையையுஞ் சைவ உணவுப்பொருள்களில் ஒன்றாக வைத்து உண்பது குற்றமாகாதென ஒருசாரார் கூறுகின்றனர். ஆராய்தலின்றியுரைக்கும் இவரதுரை சிறிதும் பொருத்தமுடைத்தன்று. “ஒரு முட்டையானது யானது உருவாகாத ஒரு கோழிக்குஞ்சே யாகும்”[1] என்று ஆங்கில இயற்கைப்பொருள் நூலார் ஆராய்ந்துரைக் கின்றமையின் அது புற்பூண்டுகளை யொப்பதாமென்றல் அறியாவுரையாகும்.கோழியால் அடைகாக்கப்படும் முட்டைகளிலிருந்து சில நாட்களிற் கோழிக் குஞ்சுகள் வெளிவருதலை எவரும் அறிவர். அதுபோல் புற்பூண்டுகளையும் அடைகாக்க வைத்தால் எத்தனை நாளாயினும் அவற்றிலிருந்து கோழி நீர்க்கோழி தாரா

  1. 5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/139&oldid=1570601" இலிருந்து மீள்விக்கப்பட்டது