❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
முதலியவற்றின் குஞ்சுகள் வெளிவரக் கண்டதுண்டோ? இல்லையே. ஆகையால், முட்டைகளையும், புற்பூண்டுகளையும் ஒன்றென்றல் மடவோருரையாம். மேலும், முட்டைகளின் வெள்ளைக்கரு மஞ்சட்கருவிற் புற்பூண்டுகட் கில்லா முடை நாற்றம் இருத்தலானும், அக்கருவிலிருந்தே சில நாட்களில் என்பு தோல் நரம்பு இரத்தம் மூளை முதலிய உறுப்புக்களெல்லாஞ் செவ்வனே அமைந்த கோழிக்குஞ்சினுடம்பு வெளிவரக் காண்டலானும், அதுபோல் நிலையியற் பொருளாகிய புற்பூண்டுகள் அவற்றின் பயன்களிலிருந்து இயங்கியற் பொருள்களாகிய கோழி குருவி கொக்கு மீன் ஆடு மாடு முதலியன உண்டாகக் காணாமையாலும் முட்டையானது சைவ உணவுப் பொருள்களில் அடங்குமென்றல் ஒருவாற்றானும் அடாது. அதுவேயுமன்றிச், சில உயிர்கட்குப் பெரிது பயன்படும்படி இறைவனால் தரப்பட்ட உடம்புகள் உருவாவதற்கு நிலைக்களனாகிய முட்டைகளை அழிப்பது, அவ்வுயிர்களின் உடம்பை அழிப்பதே யாவதல்லாற் பிறிதின்மையின், அதுவுங் கொடிய கொலைப் பாவமேயாதல் திண்ணம் என்றறிக.
இனி, இஞ்ஞான்றுள்ளாரும் மருத்துவர் சிலரும் முட்டை தின்பது உடம்பின்நலம் பேணுவதற்குச் சிறந்ததாமென்று எண்ணுவதுஞ் சொல்லுவதும் உண்மைக்கு மாறுபட்டன வாயிருக்கின்றன. ஏனென்றால், மக்களுடம்பிற் சூட்டினைத் தோற்றுவித்துக் கொழுப்பினை வளர்ப்பதற்கு இன்றியமையாது வேண்டப்படும் ‘இனிப்புணா’ (Carbo - hydrates) என்னும் - பொருள், முட்டைக் கருவிற் சிறிதுமே யில்லை யென்றும், நரம்பு நரம்பின்றசை மூளை சிறு நரம்புகளென்னும் இவற்றை வலிவேற்றி வளர்ப்பதற்கு இன்றியமையாது வேண்டப்படும் ‘முதலுணா’ (Protein) என்னும் பொருள் முட்டைக்கருவில் மிகக் குறைவாகவே இருக்கின்றதென்றும், முட்டையுணவு தீனிப்பையில் எளிதிற் செரிப்பதில்லை யென்றும்[1] ஆங்கில ஆசிரியர் நன்காராய்ந்துரைக்கின்றமையின், முட்டையுணவு மக்களுடம்புக்கு ஏற்றதல்லாத தாவதுடன், அஃது ஓருயிரினுடம்பை அழிக்குந் தீவினையையும் உண்டாக்குவதாமென்று ஓர்ந்து கொள்க. எனவே, முட்டையுணவும் புலாலுணவேயாய் விலக்கற்பாலதாமென்க.
- ↑ 6