❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
மக்கள் வாழ்க்கையைப் பற்றிய இந் நூலில், எந்தப் பகுதியையும் மறைத்தெழுதுதல் ஆகாமையாலும். அன்றி அங்ஙனம் மறைத்தெழுதினால், இன்றியமையாது தெரிந்து ஒழுக வேண்டிய முறைகள் விடப்பட்டு. அதனால் ஆண் பெண் பாலாரை இஃது அறியாமையினின் றெடுக்கமாட்டாதாய்ப் பயனின்றிக் கழியுமாதலாலும் ‘ஆண்பெண் சேர்க்கை’,‘மக்கட்பேறு’ ‘கரு விலக்கு’ முதலான பகுதிகளிற் சொல்ல வேண்டுவன வெல்லாம் ஒரு சிறிதும் மறையாமல் திறப்பாகவே வரைந்திருக்கின்றேம். மக்கள் வாழ்க்கையின் உயிர்நிலையாயுள்ள இச் சிறந்த பொருள்களைத் தெளிந்து விளக்காது விடுதலால் வழி வழிப் பெருகும் பெருந்தீங்கினை நன்குணர்ந்தே. திருமூலர் முதலான நம் பண்டையாசிரியர்களும் இவை தம்மைத் தம் நூலில் தம்மைத் தம் நூலில் மறையாதெடுத்து விளக்கி அறிவுறுத் திருக்கின்றனர். இஞ்ஞான்றை ஆங்கில அமெரிக்க ஆசிரியர்களிற் புகழ் மிகப்படைத்த ஆடவரும் மகளிருங்கூட இத்துறைகளில் மறைவு சிறிதுமின்றியே திறந்தெழுதி வருமாற்றை, இதற்குப் பின்னுள்ள எமது ஆங்கில முகவுரை யுள்ளும் எடுத்துப் பேசியிருக்கின்றேம். ஆதலால் வாழ்க்கையின் மறைபொருள் நுட்பங்கள் முற்றும், நோய் நீக்கும் இயற்கை முறைகள் முற்றும் நன்கெடுத்து விளக்கும் இந்நூல் ஆண்பெண்பாலார் இருதிறத்தினர்க்கும் பெரிது பயன் பட்டு அவரை நீடினிது வாழ்விக்கும் என்னும் நம்பிக்கை மிகுதியும் உடையேம்.
இந்நூலின் முதற்பகுதியில் விரவியிருக்குஞ் சிற்சில வடசொற்களையும் இதன் இரண்டாம் பதிப்பின்கட் களைந்து விடுதற்கு திருவருள் விரைவிற் கூட்டுவதாக.
திருவள்ளுவர் ஆண்டு,1963
மாசித்திங்கள், 3 ஆம் நாள்
மறைமலையடிகள்