❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
இம்மக்கட் பிறவி பெற்றதற்குப் பயனாம்? ஆனால், மாந்தர்கள் நூறாண்டு வரையில் திண்ணிய நல் யாக்கையுடன் உயிர் வாழ்தல் கூடுமோ என்று சிலர்க்கு ஐயந் தோன்றலாம். சிறு பருவத்திலேயே காலனுக்கு இரையாகும் இக்காலத்தார் பலர்க்கு இது புதுமையாய்த் தோன்றினும், ஆண்டின் முதிர்ந்த சிலரிடம் அவர்கள் இதைப் பற்றிக் கேட்டால், இது முன்னெல்லாம் எங்கும் பரவியிருந்ததொரு நிகழ்ச்சியாதல் புலப்படும். எத்தனையோ பெயர் நூறாண்டு வரையில் உயிரோடிருந்தார்கள்; இப்போதும் நூறாண்டுள்ள முதியோர் பலரைக் காணலாம்; நூறாண்டுக்குமேல் உயிர் வாழ்வார் சிலரையும் காணலாம். அமெரிக்கா தேயத்தில் நூறாண்டும் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டும் உயிர் வாழும் முதியோர் பலர் சேர்ந்து ஒரு கழகம் வைத்திருப் பதாக நாம் அடுத்தடுத்துக் கேள்விப்படுகின்றோம். மக்களின் வாழ்நாள் நீட்டத்தை உண்மையான் ஆராய்ந்து அறிந்து நூல் எழுதின ஜேம்ஸ் ஈஸ்டன்[1] என்பார் ஒருவர் நூறாண்டும் அதற்குமேலும் உயிர் வாழ்ந்த ஆயிரத்து எழுநூற்றுப் பன்னிரண்டு பெரியாரின் வரலாறுகளை வரைந்திருக்கின்றார்
ஜோநாதன்ஹதா[2] என்னும் ஆங்கில துரைமகன் ஒருவர் நூற்றுமுப்பத்தோராண்டு உயிர் வாழ்ந்தனராம். அவர் ஐந்து முறை மணஞ் செய்து கொண்டு ஏழு பிள்ளைகளையும். இருபத்தாறு பேரப் பிள்ளைகளையும், நூற்று நாற்பது பேரப் பிள்ளைகளின் பிள்ளைகளையும் விட்டு இறந்தனராம். தாமஸ்பார்[3] என்னும் மற்றுமோர் ஆங்கிலேயர் நூற்று அறுபத்திரண்டு ஆண்டு உயிரோடிருந்தனராம். இவர் தமது நூற்றிருபதாம் ஆண்டிலே இரண்டாவது மணஞ் செய்து கொண்டனராம். ராபர்ட் ஜென்கின்ஸ்[4] என்னும் வேறொரு துரைமகன் நூற்றைம்பது ஆண்டுவரையில் உயிர் வாழ்ந்தன ரென்றும், நூற்று நாற்பது ஆண்டுகாறும் வயலில் உழவு வேலை செய் தன ரென்றும் அறிகின்றோம். காப்டன் காடர்ட் டைமண்டு[5] என்பவர் ‘நீண்ட நாள் உயிர் வாழ்வதெப்படி’ என்னும் நூலொன்று எழுதித் தம்முடைய வாழ்க்கை முறைகளைப் பலர்க்குங் கற்பித்து வந்ததோடு தாமும் நூற்றுப் பன்னிரண்டாண்டு உயிர் வாழ்ந்தனராம். பிராஞ்சு தேயத்தில்