பக்கம்:மறைமலையம் 1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
125

திரும்பவுந் தமதுடம்பை உரம்பெறச் செய்து எல்லா மக்களும் இனிது வாழ்வரென்பது திண்ணம்

இது கொண்டு சிலர் வேறு வகையாகவும் நினைத்தல் கூடும். ஆண்டு முதிர்ந்த பிறரும் உடம்பை உரம் பெறச் செய்தல் கூடுமாகையால், இளம் பருவத்தில் நாம் விரும்பியபடி யெல்லாங் காமங், கட்குடி முதலியவற்றில் வேண்டு மட்டும் முழுகி, அதன்பிறகு யாக்கையை வலிவாக்க முயலலாம் என்றால். அவ்வாறு எண்ணுபவர்கள் அந்தோ ஏமாந்து போவார்கள்! ஒருவரது உடம்பின்நிலை மற்றொருவரது உடம்பின் நிலையைப் போல் இராது, காமங் கட்குடி முதலிய தீய துறைகளில் முழுகியுஞ் சிலருடம்பு முற்றும் வலிவு குன்றாமலிக்கும்; சிலருடம்பு அத் துறைகளிற் புகுந்த அளவினாலே அவற்றின் மிகுதி பொறாமல் அந்நொடியே அழியினும் அழியும். சிலருடம்பு முதலில் அம் மிகுதியைத் தாங்குவது போற் காட்டிப்பின் சடுதியிலே அது தாங்க மாட்டாமல் அழியினும் அழியும். ஆதலால் ஒருவன் தன்னுடம்பின் நிலையைத் தானே திண்ணமாக அறிந்து காள்ளுதல் அரிதினும் அரிதாகும்! எவ்வளவுதான் தீய நெறியில் யான் ஒழுகினாலும். என் உடம்பு சிறிதுந் தளரா தென்று உறுதியாய்ச் சொல்ல எவனுக்கும் நாவெழாது. ஏனெனில், அங்ஙனஞ் சொல்லிய சிலர் தாமறியாமற் சடுதியிலே மாண்டுபோயதைக் கண்கூடாகக் கண்டிருக் கின்றோம். வழியிற் செல்லும்போதே ஏது காரணமுமின்றித் திடீரெனக் கீழ்விழுந்து இறந்தோர் எத்தனை! அற மன்றங்களில் வழக்காராய்ந்து கொண்ருக்கும்போதே உயிர் துறந்தோர் எத்தனை! முன் நாள் இரவு உறங்கப் போய்ப் படுக்கையிற் கிடந்து, பின்னாள் அதிலிருந்து எழாமற் பிணமாய்க் கிடந்தோர் எத்தனை! உணவு கொள்ளப்போயிருந்து ஒரு பிடியுண்டு பின்னொருபிடியும் உண்ணாது மாண்டோர் எத்தனை! இவைகளையெல்லாம் எண்ணும் போது,

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/158&oldid=1597385" இலிருந்து மீள்விக்கப்பட்டது