பக்கம்:மறைமலையம் 1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
126

❖ மறைமலையம் 1 ❖

என்றும்,

புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை யென்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை

என்றும், மக்கள் வாழ்க்கையின் நிலையாமையினைச் சொல்லிய செம்மொழிகள் உண்மையே யென்பது தோன்ற வில்லையா?

அவ்வாறானால் நாம் நீண்ட நாள் உயிர்வாழ முயல்வது பயனின்றாய் முடியும் போலுமெனிற், சடுதியிலே சாவு நேர்ந்தாலும் அச் சாவிற்குக் காரணமாய் முன்னமே ஒருவனாற் செய்யப்பட்ட தீய செயல்களும் ஒழுங்கின்மையும் பலவாயிருக்கும். அவற்றை அவன் அறிந்து விலக்க முயலாமல் நாம் என்றும் இவ்வாறே யிருப்போமென்று எண்ணித் தான் முன் செய்தவற்றையே பின்னுஞ் செய்து வருவானாயின், தன்னைய றியாமலே தான் சடுதியில் இறந்து படுவான். ஆகையால் ஒவ்வொருவருந் தமது சிறு பருவம் முதற் கொண்டே நற்செயல்களைச் செய்து ஒழுங்கு தவாறமல் நடந்து வருவார்களானால் அவ்வாறு அவர்கள் சடுதியில் இறந்துபோகச் சிறிதுங் காரணமே யில்லை. நீண்ட காலம் உயிரோடிருந்துவரும் முதியோர் தம் ஒழுகலாறும்இதற்கு ஒத்ததாகவே யிருக்கின்றது.

அவ்வாறானால் நம்முடைய செயலாகவல்லாமல். இடி மின்னல், மழை, தீ, நில அதிர்ச்சி,பாம்பு, புலி முதலிய மற்றைப் பொருள்களாலும் உயிர்களாலும் எதிர்பாராத சாக்காடு நிகழக் காண்கின்றோமே; இதனை விலக்கல் எங்ஙனங் கூடுமென்றால், நம்மனோர் நற்செயலும் நல்லெண்ணமும் உடையராய் நடந்து; அருந்தல், பொருந்தல், உறங்கல், உடுத்தல் முதலிய வகைகளிலெல்லாம் ஒழுங்காகவுந் துப்புரவாகவும் நடத்தலைக் கைக்கொண்டு வருவார் களானால், அத்தகையோர் அறிவு இவ்வுலகமெல்லாம் படைத்துக் காத்து வருகின்ற கடவுளின் திருவருளொளியில் இயல்பாகவே அழுந்தி நிற்கும்; அங்ஙனம் அருளொளியில் அழுந்திநிற்கும் அறிவிலே, பின்வரப்போகுந் தீய நிகழ்ச்சிகள் திண்ணமாய் முற்கொண்டே விளங்கித் தோன்றும். இதற்கு உண்மையான நிகழ்ச்சிகள் கணக்கில்லாமல் நிகழ்ந்திருக்கின்றன. அரை நூற்றாண்டுக்குமுன் மதுரையில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/159&oldid=1597387" இலிருந்து மீள்விக்கப்பட்டது