பக்கம்:மறைமலையம் 1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
127

துரைமகனார் அங்கயற்கண் அம்மையிடத்தில் அளவில்லாத அன்புடையராயுந் தூய நினைவுடையராயும் ஒழுகிவந்தார். அவர் ஒரிரவு தம் மக்கள் மனைவியரொடு தமது வீட்டின் மேன்மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்த போது. அழகிய உருவத்தோடுங் கூடியஒரு சிறு பெண் தோன்றி. ‘இந்த மேன்மாளிகை இடிந்து விழப்போகின்றது, நீ நின் மனைவி மக்களோடுங் கீழ் இறங்கிப்போ’ என்று சொல்லிக் கையைப் பிடித்திழுப்பதாகக் கனவு கண்டு, உடனே அத் துரைமகனார் விழித்தெழுந்து அவர் எல்லாரோடுங் கீழ் இறங்கி அப்புறம் போன அந்த நேரமே அம்மாளிகை இடிந்து விழுந்தது. அவர்கள் எல்லாரும் உயிர் தப்பிப் பிழைத்தார்கள்.

இனி, எம்முடைய வாழ்நாட்களில் இங்ஙனமே நேர்ந்து வரும் நிகழ்ச்சிகள் பல உண்டு. ஒருமுறை யாம் பலமனேரி யென்னும் ஊரிற் குறுங்காட்டின் நடுவிலுள்ள மாளிகை ஒன்றிற் றங்கியிருக்குமாறு நேர்ந்தது. ஒருநாள் இரவு அதில் யாம் படுத்து உறங்குகையில் ஒரு பாம்பு வந்து எமது கையிற் கௌவுவதாகக் கனவு கண்டு, சடுதியில் விழித்துப் பார்க்க, உண்மையாகவே ஒரு கரும்பாம்பு எமது வலதுகைம் மேற்புறத்தைக் கௌவிப் பல்லை அழுத்தம் நிலையிலிருந்தது. உடனே அதனைத் தப்பி அப்புறம் எழுந்துபோய் உயிர் பிழைத்தேம், மற்றொரு முறை திருநெல்வேலியில் ஒரு விட்டில் தக்கார் பலரோடு நல்லுரை பேசிக் கொண்டு சுவர்மேற் சாய்ந்து உட்கார்ந்திருந்தேம். அவ்வாறிருக்கையில், அந்தச் சுவரின் அடியில் ஒரு தேள் இருப்பதாக எமக்குச் சடுதியிலே ஒரு நினைவு தோன்றிற்று; உடனே பேச்சை நிறுத்தி அப்புறம் நகர்ந்து திரும்பிப் பார்க்கப், பெரிய கருந்தேள் ஒன்று எமக்குப் பினனே இருந்தது; அதற்குந் திருவருளுதவியால் தப்பிப் பிழைத்தேம், இங்ஙனம் யாம் தப்பிப் பிழைத்து வருகின்ற நிகழ்ச்சிகள் பல உண்டு. அவற்றையெல்லாம் இங்கு விரித்தெழுதல் வேண்டா கூறலாகும், இவ்வாறே மற்றையோர் பலர்க்கும் முன்னறிவிப்புகள் தோன்றி அவர்களை உயிர் பிழைப்பித்திருக்கின்றன. ஆகையால், நம்மை இவைபோன்ற இடர்களினின்றும் விடுவித்துப் பாதுகாத்தற்கு எல்லாம் வல்ல இறைவன் றிருவருளானது காத்துக் கொண்டிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/160&oldid=1597389" இலிருந்து மீள்விக்கப்பட்டது