❖ மறைமலையம் 1 ❖ |
ஆகவே, நாம் செய்ய வேண்டுங் கடமைகளை வழுவாது செய்து வருதலுடன், இறைவன்றிருவருள் நம்மைப் பாதுகாத்து வருகின்றது என்னும் ஒரு முழு நம்பிக்கையும் நமக்கு இடையறாது உண்டாகுமானால், நாம் சடுதியில் வரும் இடர்களுக்குத் தப்பிப் பிழைப்போ மென்பது திண்ணம்
அவ்வாறானால் எல்லாருள்ளுமிருந்து உணர்த்தி வருகின்ற திருவருளானது சிலர்க்கு மட்டும் பின்வரும் இடர்களை முன்னறிவிப்பதும், பலர்க்கு அவ்வாறு அறிவியாததும் ஏன் எனின்; எல்லாருள்ளும் அத் திருவருள் ஒளி விளங்கிக் கொண்டிருந்தாலுஞ், சிலர் மட்டும் அதனை அகந் திரும்பிப் பார்க்கின்றார்கள், பலர் அதனை அங்ஙனந் திரும்பிப் பார்க் கின்றார்களில்லை. ஞாயிற்றினொளி முன்னே கண்ணில்லாத குருடர் நாடோறும் இருந்தாலும் அதனை அவர் காணமாட்டு வாரல்லர் கண்ணுடையவர்களே அதனைக் கண்டு பயனடைவார்கள். அதுபோல, மக்களிற் பெரும்பாலார் உள்ளொளி ஒன்றிருக்கின்ற தென்றுகூட நினையாமற், பலரை ஏமாற்றிப் பொருள் தொகுப்பதிலுங், காமங் கட்குடி முதலான தீயவொழுக்கங்களைத் தழுவுவதிலுஞ், சோம்பலுற்றுக் கிடப்பதிலுந், தீய செய்திகளையே நினைப்பதிலுந் தமது உணர்வைக் கழியவிடுகின்றா ராதலால், அவர் தமது அகக் கண் குருடுபட்டு அவ்வுள்ளொளியைக் காணாது போகின்றது. தம்முடைய நினைவுஞ் செயலுந் தீய நெறியிற் செல்லாமல் அவையிற்றை அடக்கி, உள் நின்ற அறிவொளியை நோக்க முயன்று வருபவர்களுக்கு அகக்கண் திறக்கு மாதலால், அவர்கள் அதன் உதவியாற் பின்வரும் நிகழ்ச்சிகளை முன்னே உணர்ந்து இனிது வாழ்வார்கள். இவ் வகக்கண்ணைத் திறப்பதற்குச் செய்ய வேண்டும் பழக்கங்களை இந் நூலின் பிற்பாகத்தில் விளக்கிக் காட்டுவாம்.
இனி, நீண்டநாள் உயிர்வாழ்ந்திருத்தற்குக் கைப்பற்ற வேண்டிய முறைகள் உடம்பைப் பற்றியனவும் உயிரைப் பற்றியனவும் என இரண்டுவகை உண்டு. அவற்றுள் முந்தியது உடம்பைப் பற்றிய முறையாதலால். அம் முறையுள் முதல் நிற்பதான பிராணவாயுவைப் பற்றி அடுத்த இயலிற் பேசப் போகின்றாம்.