130
2. பிராண வாயு : உயிர்க்காற்று
நாம் இந்த உலகத்தில் உயிர்வாழ நெடுங்காலம் வேண்டுமானால் நமது உடம்பிற்கு இன்றியமையாது வேண்டிய நுகர் பொருள்களைத் தருதல் வேண்டும். அவை எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது பிராணவாயுவேயாகும். தண்ணீர் அருந்தாமலுஞ் சோறு உண்ணாமலும், வேறு தின்பண்டங்கள்
உட்கொள்ளாமலும் மக்களும் மற்ற உயிர்களும் பலநாள் உயிரோடிருத்தல் கூடும். ஆனால், உயிர்க்காற்று இல்லாமலோ எந்த உயிரும் அரைநிமிடங் கூட உயிரோடிருத்தல் முடியாது. உடம்பைப் பாதுகாத்தற்கு வேண்டிய முதற் பொருள்கள் அத்தனையும் பிராண வாயுவிலேயே இருக்கின்றன. மற்றெதனையுமே உட்கொள்ளாமல் உயிர்க்காற்றை மட்டும் உணவாகக் கொண்டு எத்தனையோ கோடி உயிர்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன, தவ முயற்சியில் முதிர்ச்சி பெற்ற துறவிகள் காற்றை உணவாக உட்கொண்டு உயிரோடிருத்தலை நாம் பன்முறையுங் கேள்விப்பட்டிருக்கின்றோம் அன்றோ? நல்ல பாம்பானது வேறு இரை தின்னாமற் காற்றை மட்டும் உட்கொண்டு ஆறு திங்களுக்குமேல் உயிரோடிருந்த திறம் யாம் எத்தனையோ முறை கேள்விப்பட்டிருக்கின்றோம். இவ்வுண்மைகளை நோக்குங்கால் உயிர்க்காற்றே நமது உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத தென்பது இனிது விளங்கும்.
ஆனால், நம்மவர்களிற் பெரும்பாலார் உயிர்க் காற்றின் சிறப்பையும், அது நமது உடம்பிற்கு எவ்வளவு இன்றியமையாத தென்பதையும், அதனை எந்த வகையாற் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டுமென்பதையும் அறிந்து கொள்ளாமற் பல வகைப்பட்ட நோய்களுக்கு ஆளாகி ஆண்டு முதிரா முன்னரே இறந்துபோகின்றார்கள். நுரைஈரலைப் பற்றிய நோய்களும்