பக்கம்:மறைமலையம் 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
131

மார்பு நோயுஞ் செரியாமையும், ஈளை யிருமலும், இன்னும் இவை போன்ற கொடிய நோய்களும் உயிர்க்காற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வகை அறியாதவர்களுக்கு வருகின்றன. இந் நோய்களால் எத்தனைகோடி மக்கள் மாண்டுபோனார்கள்! எவரும் உயிர்க்காற்றை மட்டும் நன்றாகப் பயன்படுத்தி வருவார்களானால், அவர்கள் தூய நல்லுடம்பு உடையவர்களாகி அளவில் காலம் உயிர்வாழ்ந் திருப்பரென்பது திண்ணம்.

நாகரிகம் மிகுந்து வருவதாகச் சொல்லப்படும் இக்காலத்தில் மக்கள் செய்து வருஞ் செய்கைகள் எல்லாம் பெரும்பாலும் உலக இயற்கைகைக்கு மாறுபட்டு வருகின்றன. இவ்வாறு இவர்கள் செய்கை மாறுபட்டு வருதலினாற்றான் காலங்குறுகிப் பலவகைப் பிணிகளுக்கும் ஆளாகி மாண்டு போகின்றார்கள். ஆனாற், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் நம்முன்னோர்கள் மரங்கள் மேற் கட்டிய குடிசைகளிலும், மரப்பொந்துகளிலும், மலைக் குகைகளிலும் உறைந்து கொண்டு, காய் கனி கிழங்குகளை உணவாக அருந்தியும், அருவிநீர் ஊற்றுநீர் பருகியும், வெயிலிற்றிரிந்தும், மழையில் நனைந்துந், தூயகாற்றை உள்ளிழுத்தும் உயிர் வாழ்ந்த காலத்தில், அவர்கள் எவ்வகைப்பட்ட நோயும் இலராய் நெடுங்காலம் உயிர்பிழைத்திருந்தனர். இங்ஙனம் உலக இயற்கைக்குப் பொருந்த வாழ்க்கை செலுத்திய அவர்களது உடம்பு காழ்போல் வலிவடைந்து உடல்வலி மனவலியுள்ள மக்களை ஈன்றது. அம் முன்னோர் கால் வழியில் வந்தவரான நாமோ அவ்வியற்கையினின்றும் வழுவி, அதற்கு முற்றும் மாறான வழிகளிற் காலங்கழித்து வருகின்றோம். நம் முன்னோர் இருந்த இடங்கள் ஆள் நெருக்கம் இல்லாத காடுகளும், மலைகளும், பாலை வெளிகளுங் கடற்கரைகளுமாதலால், அவர்கள் அங்கே தூயதாயுள்ள உயிர்க்காற்றை உள்ளிழுத்து வந்தார்கள், இப்போது நாமெல்லாம் இருக்கும் இடங்கள் ஆள் நெருக்கம் உள்ளனவாய் இண்டும் இடுக்கும் பொந்தும் சகதியும் அழுக்கம் நிறைந்து இடை டைவெளி முழுதும் அழுக்கேறப் பெற்றிருத்தலால் நாம் அங்கேயுள்ள நச்சுக்காற்றை உள்ளிழுத்து நமது உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் நஞ்சாகுமாறு செய்து கொள்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/164&oldid=1597425" இலிருந்து மீள்விக்கப்பட்டது