பக்கம்:மறைமலையம் 1.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
135

தண்ணீர்மேற் பாலேடு படர்ந்தாற் போலச் சுண்ணாம்பு கட்டும்; இப்படியே ஒருவர் வெளிவிடுங் காற்றெல்லாம் அத் தண்ணிரின்மேல் வீசிக் கொண்டிருக்குமாயிற் சிறிது நேரத்திலெல்லாம் அதிலிருந்து சிறிது கட்டிச் சுண்ணாம்பே எடுக்கலாம். ஆகவே, நச்சுக் காற்று உண்டென்பதை அறிந்து கொள்ளுவதற்குச் சுண்ணாம்புத் தண்ணீர் மிகவும் உதவி செய்யும் என்க. இதனால், மக்களும் விலங்குகள் பறவைகள் முதலான மற்ற உயிர்களும் வெளி விடுங் காற்றில் நச்சுக் காற்று உண்டென்பது நன்கு விளங்கும். ஒருவர் தூய காற்று நிரம்பிய இடத்திலிருந்தால் அவர் அங்கே அக்காற்றிலுள்ள உயிர்ப் பொருளை அதன் வழியாக உள்ளே இழுத்து, நுரை ஈரலினுதவியால் இரத்தத்திற் கலப்பித்து, அதனை உடலெங்கும் பரவுவித்து, அவ்வுடம்பில் நொடிக டோறுங் கக்கப்பட்டு வரும் அழுக்கேறிய நச்சுக் காற்றை இரத்தத்தின் உதவியால் நெஞ்சப்பைக்கு வருவித்து, அங்கே அதனொடு பொருந்தியுள்ள நுரைஈரலின் உதவியால் இரத்தத்தினின்றும் அந் நச்சுக்காற்றைப் பிரிப்பித்துத் திரும்பவும் மூக்குத் துளையின் வாயிலாக அதனை வெளிப்படுத்துகின்றார். இங்ஙனம் அவர் மூச்சின் ஓட்டத்தை நடப்பிக்கின்றதனால் அவர் வருவதற்குமுன் தூயதான உயிர்க்காற்று நிரம்பியிருந்த இடம் அவர் வந்திருந்த சில நாழிகைக்குப் பிறகு அழுக்கேறிய நச்சுக் காற்றினால் நிறைக்கப்படும்.

ஆகவே, ஒருவர் இருக்கும் இடம் எவ்வளவு தூய காற்று உடையதாயிருந்தாலும், அவர் அங்கிருந்த சில நாழிகைப் பொழுதிற்குள்ளெல்லாம் அது நச்சுக் காற்றால் நிரப்பப்படுகின்றமையால்,அங்ஙனம் அடிக்கடி வெளிவந்து அழுக்குப்படுத்துங் காற்று அவ்விடத்திலேயே நில்லாமல் மிகு விரைவில் அப்பாற்போகவும், வேறு தூயகாற்று தாமிருக்கும் இடத்தில் வந்து நிறையவுஞ் செய்து கொள்ளல் வேண்டும். நாம் இருக்கும் வீடுகளில் ஒருவருக்கு மேல் மக்கள் பலர் இருத்தலால் அவ்வீடுகளில் உள்ள தூய காற்று எவ்வளவு விரைவில் நஞ்சாய்ப் போகும் என்பதை நாம் முன் வரைந்த பகுதிகளில் நன்கு விளக்கினாமாதலால், அதைப் பற்றி இன்னும் மிகுதியாகயாம் வற்புறுத்தெழுதல் வேண்டா. மக்கள் பலர் இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/168&oldid=1597430" இலிருந்து மீள்விக்கப்பட்டது