❖ மறைமலையம் 1 ❖ |
வீடுகளில் அப்போதைக்கப்போது சேரும் நச்சுக் காற்றை வெளிப்படுப்பித் தற்குந் தூயகாற்றை உள் நுழைவித்தற்குஞ் சாளரங்கள் பல அமைத்தல் வேண்டும். வெள்ளைக்காரர் இருக்கும் வீடுகளைப் பாருங்கள்! அவ் வீடுகளில் எந்தப் பக்கத்திற் பார்த்தாலுஞ் சாளரங்கள் இருக்கின்றன. வெளியே இடைவெளியில் இயங்குந் தூய காற்றானது அச் சாளரங்களின் வழியே உள்ளே தடையின்றி வந்துலவி அவ்விடங்களை மிகவுந் துப்புரவு செய்கின்றது. அவ் வீடுகளில் இருக்கும் அவர்கள் எவ்வளவு செம்மையாக இருக்கின்றார்கள்! நீங்கள் பார்த்ததில்லையா! அன்புள்ள எம் தமிழ் நாட்டவர்களே! நீங்கள் கட்டுகின்ற வீடகளிலோ வென்றாற் பெரும்பாலுஞ் சாளரங்களே நீங்கள் வைப்பதில்லை; அன்றி வைத்தாலும் மிகச் சிறியதாய் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் வைப்பதில்லை. அதனால் நீங்கள் அடைவது யாது? மூச்சினால் வெளியே விட்ட நச்சுக் காற்றினையே திரும்பவும் மூச்சினால் உள்ளிழுக்கின்றீர்கள்; உள்ளே சென்ற நச்சுக் காற்றை இரத்தத்திற் கலப்பிக்கும்போது நுரையீரலின் பெரும்பாகஞ்சுருங்கிப் போதலால் அந் நுரையீரல் வலிவிழந்து போகின்றது; நச்சுக் காற்றோ இரத்ததிற் கலந்து உடம்பெங்கும் பரவி எல்லாவற்றையும் நஞ்சாக்குவதொடு தலையிலுள்ள மூளையின் வலிவையுங் குறைத்து அறிவையும் மழுங்கச் செய்கின்றது; இதனால் உடம்பெங்கும் பல வகையான நோய்கள் உண்டாகின்றன. நுரையீரல் சுருக்கம் அடைய அடைய மூச்சின் ஓட்டங் குறைகின்றது. அதனால், ஈளை, எலும்புருக்கி நோய், நீரிழிவு முதலான பொல்லாத நோய்கள் கிளைத்து உங்களிற் பெரும்பாலாரை இளஞ் சாக்காட்டிற்கு உள்ளாக்குகின்றன. நீங்கள் மட்டுமா? உங்கள் வயிற்றிற் பிறக்கும் ஒன்றும் அறியா இளங்குழவிகளும் அல்லவோ உங்கள் நோய்களைத் தாமும் பெற்றுப் பெரிதுந் துன்புற்று இறக்கின்றன! யாராவது நல்லறிவுடையோர் உங்களிடம் வந்து, ‘வீடுகளை அகலமாகவுந் திருத்த மாகவுங் கட்டுவித்துச் சாளரங்கள் பலப்பல அமைத்து நல்ல காற்றுத் தடையின்றி உலவும்படி செய்யுங்கோள்,’ என்று சொன்னால் அவர்கள் நற்சொல்லைப் பொருள் பண்ணாமற் பாராமுகஞ்செய்து ‘எங்களுக்கு அவ்வாறு வீடுகட்டுகிற வழக்கமில்லை. அது வழக்கத்துக்கு மாறாகும்’ என்று