❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
முழுமடத்தனமாகச் சொல்லி அவரையும் ஏளனம் பண்ணுகிறீர்கள். இதனால் வீடுகளை மிகவும் அழகாகக் கட்ட வேண்டுமென்பது எமது கருத்தன்று. குறைந்த செலவிலேயே துப்புரவாகவும் அகலமாகவும், நல்ல காற்றுத் தடையின்றி வந்து உலவும் வகையாகவுஞ் சாளரங்கள் பல அமைத்து எளிதிற் கட்டலாம். சாளரங்கள் இல்லாத அறையில் ஒருவரை வைப்பது அவரை எளிதாகக் கொலை செய்வதற்கே ஈடாகும். அவரை அவ்வறைக்குள்ளேயே வைத்துக் கதவை இழுத்தப் பூட்டி விட்டால், முதலிற் சில நேரங்கள் வரையில் அவர் அங்குள்ள காற்றையெல்லாம் உள்ளிழுத்துப் பிறகு அவ்வறை முழுதும் நச்சுக் காற்றை நிறைப்பர்; அந் நச்சுக் காற்றுப் போவதற்கு வழியில்லாமையால் அவர் திரும்பவும் அதனையே உட்கொள்ள நுரையீரல் சுருங்கி; அசையாமல் நின்று போகும்; உடனே அவர் திக்குமுக்காடி இறந்து போவதுதிண்ணம். ‘இதற்கு டில்லியில் அரசு புரிந்த கொடுங்கோன் மன்னனான சிராஜூ டௌலா என்பவன் செய்வித்த கொடுஞ் செய்கையே போதுமான சான்றாகும்; அவன் வெள்ளைக்காரரோடு பகைகொண்டு அவர்களில் நூற்று நாற்பத்தாறு பெயரைப் பிடித்துப் பதினெட்டு அடி நாற்பக்க அளவுள்ள ஓர் இருட்டறையில் ஒரு நாளிரவு சிறையிடுவித்தான்; மறுநாட் காலையில் அவ்வறைக் கதவைத் திறந்து பார்க்கையில் இருபத்து மூன்றுபேர் மட்டுங் கொத்துயிருங் கொலையுமிருமாய்க் கிடந்தார்கள்; மற்ற நூற்று இருபத்து முன்று பெயரும் வெறும் பிணமாய்க் கிடந்தார்கள்’. இதனை ஆழ நினைத்துப் பார்க்கையில், மக்கள் உயிர் வாழ்வதற்கு வேண்டிய உறைவிடம் எவ்வளவு அகலமாகவுந், தூய உயிர்க்காற்று உலவுவதாகவும் இருக்க வேண்டுமென்பது புலப்படவில்லையா?
மேலும் மிகுதியான காற்று உலவப் பெறாத ஒடுக்கிடங்களிலுஞ் சிறிய அறைகளிலும் நம்மவர்கள் பலர் நெருக்கமாகப் படுத்துத் தூங்குதலும் உறைதலுஞ் செய்கின்றார்கள். இங்ஙனஞ் செய்வதனால் அவ்விடங்களிற் குறைவாக உள்ள நல்ல காற்றும் அவர்களது மூச்சினால் மிகுவிரைவிற் கெட்டு நஞ்சாய்ப் போதலால், அவர்கள் அந்த நச்சுக் காற்றைப் பிறகெல்லாம் உள்ளிழுத்துத் தமது உடம்பை நோய்க்கு இரையாக்குகின்றார்கள்.