❖ மறைமலையம் 1 ❖ |
மக்களின் மூச்சு ஓட்டத்தால் உண்டாகும் இந்த நச்சுக் காற்றானது பகற் காலத்தைக் காட்டிலும் இராக் காலத்தில் மிகுதியாகப் பரவும். எதனாலென்றாற் கூறுகின்றாம்: பகலவன் வெளிச்சம் உள்ள பகற்காலத்திற் புற்பூண்டு மரஞ் செடி கொடி முதலான நிலையியற் பொருள்கள் நச்சுக் காற்றை உள்ளே இழுத்துத் தூய உயிர்க்காற்றை வெளியே விடுகின்றன; வெயில் வெளிச்சம் இல்லாத இராக்காலத்திலோ புற்பூண்டு முதலியன உயிர்க் காற்றை உள்ளிழுத்து நச்சுக் காற்றை வெளிவிடுகின்றன. ஆகவே, புற் புண்டுகளின் மூச்சு ஓட்டமானது பகற்காலத்தில் ஒரு வகையாகவும் இராக்காலத்தில் மற்றொரு வகையாகவும் முற்றும் மாறுபட்டு நடத்தல் நினைவு கூரற்பாலதாகும். மற்று, மக்களின் மூச்சு ஓட்டமோ எக்காலத்தும் ஒரே தன்மையாக நடைபெறுகின்றது. பகல் இரா என்னும் இரு காலத்தும் உயிர்க்காற்றை உள்ளிழுத்து நச்சுக்காற்றை மக்கள் வெளிவிடுகின்றார்கள். பகற்காலத்தில் இவர்கள் வெளிவிடும் நச்சுக்காற்றை மரஞ் செடி கொடி முதலிய நிலையியற் பொருள்கள் தாம் உள்ளிழுத்துத் தூய உயிர்க் காற்றை வெளியே கக்குகின்றன; இங்ஙனங் கக்கப்பட்ட தூய உயிர்க் காற்றை மக்கள் உள்ளிழுப்பதனால் மிகவுஞ் செம்மையான உடம்பு உடையவராகின்றார்கள் சுற்றிலும் மரங்கள் அடர்ந்த இடங்களில் வீடுகட்டி இருப்பவர்கள் மிக்க நலமுள்ளவர்களாயிருப்பது இந்த ஏதுவினாலேதான்; பகற்கால முழுதும் இவர்கள் வெளிவிடும் நச்சுக்காற்றை இவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் இழுத்து விழுங்கித் தூய உயிர்க்காற்றை வெளிவிட, அங்ஙனம் வெளிவிடப்பட்ட தூய காற்றை அங்குள்ள அம் மக்கள் உட்கொண்டு தூய இரத்தம் வாய்க்கப் பெற்றவர்களாய்ச் செம்மையாயிருக்கின்றார்கள். ஆனால், இராக்காலத்திலோ மக்களும் நச்சுக் காற்றை வெளிவிட மரங்களும் அங்ஙனமே நச்சுக்காற்றை வெளிவிட, எங்கும் நச்சுக்காற்று நிரம்பியிருத்தலால், அக்காலத்திலேதான் மக்கள் மிகவுங் கருத்தாக இருத்தல் வேண்டும். இதனாலேதான், நோயாளிகளுக்கு இராக் காலத்தில் நோய் மிகுதிப்படுகின்றதென்று சொல்லுகிறார்கள். இராக் காலத்தில் மரங்களின்கீழே படுக்கலாகாது என்று ஆசாரக்கோவையிற் சொல்லப்பட்டதும்