❖ மறைமலையம் 1 ❖ |
நச்சுக்காற்றையும் மக்கள் வீட்டுள் வெளிவிடுகின்ற நச்சு ககாற்றையும் போக்கித் துப்புரவு செய்வது திண்ணம். ஆகவே, மரங்கள் எக் காலத்தும் வீட்டைச் சுற்றியிருப்பது உடம்பின் நலம் பேணுதற்கு இன்றியமையாத தொன்றாமென்று உணர்க.
இன்னும் இராக்காலத்தில் வீட்டினுள்ளே நச்சுக் காற்றை மிகுதிப்படுத்துகின்ற பொருள்களையெல்லாம் நீக்கல் வேண்டும்., இராக்காலத்தில் முதன்மையாய் உறங்குதற்குப் போகுந்தறு வாயில்; வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை எல்லாம் நிறுத்தி விடுவது நல்லதாகும். ஏனென்றால், விளக்குகள் எரிவதற்குத் தூய உயிர்க்காற்று முதன்மையாக வேண்டப்படுகின்றது; உயிர்க் காற்றை உரிஞ்சி எரிகின்ற விளக்குகளானவை அங்ஙனம் எரிந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அழுக்கேறிய நச்சுக்காற்றை வெளிப்படுத்துகின்றன. ஆகவே, மக்கள் உறங்கும்போது விளக்குகள் எரியுமானால் அவர்களது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தூய காற்றை அவைகள் இழுத்துக் கொண்டு அவர்களுக்குத் தீமையை விளைக்கும் நச்சுக்காற்றை மேன்மேல் வெளி விடுமாதலால் அதனை உள்ளிழுத்து அவர்கள் தமதுடம்பின் நலத்தை இழந்து போவார்கள். இதனாற் போலுந் ‘தலை மாட்டில்’ விளக்கு எரியவிடலாகாது என்று வீடுகள் தோறும் வழங்கி வருகின்றார்கள். மூச்சின் ஓட்டம் முகத்தில் அமைக்கப்பட்ட மூக்கின் துளைவழியாக நடைபெறுதலால் அதன் அருகில் விளக்கு எரிவது உயிர்க்காற்று மாறி நஞ்சாய்ப் போவதற்கு இடமாகும் என்பதுதான் அதனாற் போந்த கருத்தாகும்.
இன்னும் வீட்டினுள்ளே யுள்ள புழக்கடை முற்றத்திற் சேறுங் கும்பியும் இல்லாமல் அவற்றை முழுதுங் கழுவி அவ்விடத்தைத் துப்புரவாக வைத்தல் வேண்டும். குப்பைகளும் அழுக்குத் துணிகளும் இல்லாமல் அவற்றையும் அகற்றல் வேண்டும். வீட்டுச் சுவர்களின் மேல் எந்த வகையான அழுக்கும் படியாமல் அவற்றையுந் துப்புரவாக வைத்திருத்தல் வேண்டும். இதற்காக அடிக்கடி அச் சுவர்களின்மேற் சுண்ணாம்பு தீற்றல் வேண்டும். சாக்கடைகளிலுஞ் சுண்ணாம்பைக் கரைத்துத்