பக்கம்:மறைமலையம் 1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
141

தெளித்துவரல் வேண்டும். நச்சுக்காற்றை உரிஞ்சிவிடக் கூடிய ஆற்றல் சுண்ணாம்பினிடத்தே அமைந்திருக்கின்றது. இரவிற் படுக்கப் போகும் பொழுது விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு,அவற்றால் உண்டான நச்சுக்காற்றுப் போகும்படி சாளரங்களைத் திறந்து நல்ல காற்று உள்ளே உலாவும்படி செய்வித்து, அதன்பிறகு துயில் கொள்ளச் செல்லல் வேண்டும். அங்ஙனந் துயில் கொள்ளுமிடத்தும் ஒருவரோடொருவர் சேர்ந்துபடுத்தல் ஆகாது. ஏனெனில், ஒருவர்விடும் நச்சுக் காற்றை மற்றொருவர் உட்கொள்ளும்படி நேருமாகையால்,அஃது உடம்பின் நலத்திற்கு மிகவும் கெடுதியை விளைப்பதாகும். ஆகவே, ஒரு வீட்டிற் பலர் இருந்தால் ஒவ்வொருவருந் தனித் தனியே விலகிப்படுப்பது தான் உடம்பின் நலம் பாதுகாப்பதற்கு உரிய நன்முறையாகும் என்க.

இனித், துயில் கொள்ளுங்கால் மற்றொரு முதன்மையான பொருளுங் கருத்திற் பதிக்கற்பாலதாகும். நச்சுக் காற்றுத் தடிப்புள்ளதாயும், உயிர்க்காற்று நொய்ய தாயும் இருக்கின்றன. தடிப்பான பொருள்களை யெல்லாம் நிலமானது தன்னிடத்தே இழுக்குந் தன்மை யுடைமையினால், நச்சுக்காற்றானது எப்போதும் நிலமட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும்; உயிர்க் காற்றோ நொய்ய பொருளா கையால் நிலமட்டத்திற்கு மேல் உலவிக் கொண்டிருக்கும். இந்த ஏதுவினால், நிலத்தின் மேற் படுப்பதைக் காட்டிலுங் கட்டிலின்மேற் படுப்பதே மிகவும் நல்லதாகும். நிலத்தின்மேற் படுத்திருக்குங்கால் தாம் படுத் திருக்குமிடத்தில் தூயகாற்று மிகுதியாக வீசாவிட்டால் அதன்மேற் படிந்திருக்கும் நச்சுக்காற்றை உள்ளிழுத்து அங்குள்ளோர் தமதுடம்பின் நலத்தை இழப்பர். கட்டிலின்மேற் படுத்திருப்பவர்களோ வென்றால் வெளிக்காற்று வீசா விட்டாலும், நச்சுக்காற்றுக் கட்டிலின்கீழே யிருத்தலால்,அதனை உட்கொள்ளாமற் கட்டிலின் மேலே உலாவும் உயிர்க்காற்றை மட்டும் உட்கொண்டு நலமாயிருப்பர்.ஆனதனால்,நிலத்தின்மேற் படுப்பதை விடக் கட்டிலின்மேற் படுப்பது பன்மடங்கு நலன்றருவதா மென்க.ஆயினுந், தூயதான வெளிக்காற்று எந்நேரமும் வந்து உலவிக் கொண்டிருக்கும் இடங்களிற் நிலத்தின்மேற் படுப்பது குற்றமாகாது; ஏனென்றால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/174&oldid=1597448" இலிருந்து மீள்விக்கப்பட்டது