❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
3.பிராணாயாம அப்பியாசம்: மூச்சுப் பழக்கம்
மக்களுடைய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்பினதாகிய உயிர்க்காற்றின் நன்மையையும், அதற்கு மாறான நச்சுக் காற்றின் தீமையையும் மேலை இயல்களில் ஒருவாறு விரித்து விளக்கிக் காட்டினேம். இனி, இந்த இயலில் அவ்வுயிர்க் காற்றை முச்சுவிடத் தெரிந்து பழகும் வகையை எடுத்துக் கூறப்போகின்றேம். நூறு ஆண்டும் அதற்கும் மேலும் உயிர்வாழ விரும்புகின்றவர்ளுக்கு இந்த நூலிற் சொல்லப்படும் ஒவ்வொரு பொருளும் விலையிடுதற்கரிய மாணிக்கங்களாகவே தோன்றும், இந்த நூலில் எம்மால் எடுத்துச் சொல்லப்படும் பொருள்கள் எளிதிற் கிடைப்பன அல்ல; ஆகயால் நெடுங் காலம் உயிரோடிருந்து பயன்பெற வேண்டும் நண்பர்கள் இவற்றை மனத்தின்கண் ஊன்றிப் பெறுதற்கரிய பெரும் பயனைப் பெறுவார்களாக! பின்னே சொல்லப்படும் பொருள் மிகவும் உன்னிக்கற் பாலதொரு முழு மாணிக்கமாகும். நன்றாக உற்றுணர்க.
மக்கள் ஒவ்வொருவருஞ் சிறிது நேரம் உன்னிப் பார்களானால், தமது மூக்குத் துளையில் வரும் உயிர்க் காற்று மாறி மாறி ஓடுவதை விளக்கமாகத் தெரிந்து கொள்ளல் கூடும். உயிர்க்காற்றுச் சிறிது நேரம் வலது மூக்கில் ஓடி வரும்; அப்புறஞ் சிறிது நேரம் இடது மூக்கில் ஓடிவரும்; அப்புறம் ஒரு சிறிது நேரம் இரண்டு மூக்கிலும் ஒப்ப ஓடிவரும். இங்ஙனம் இது மாறி மாறி ஓடி வருதலும் ஒப்ப ஓடி வருதலும் ஏன் என்று இதுவரையில் நீங்கள் ஆராய்ந்து பாராவிட்டாலும் இவ்வுண்மையை யாம் தெரிவித்த பிறகேனும் இஃது ஏதோ ஒரு பெரும் பயன் தருதற்காகவே இவ்வாறு ஒடி வருகின்றதென